100 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்க இந்தியா தயாரா?

புதுடெல்லி: நாட்டிலுள்ள சிரின்ஜ் மற்றும் ஊசி தயாரிக்கும் 20 உற்பத்தி நிறுவனங்களை ஆன்லைன் முறையில் அரசின் பிரதிநிதிகள் சந்தித்ததையடுத்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் கழகத்திலிருந்து, அவர்களுக்கு ஒரு எக்ஸ்ல் படிவம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் படிவத்தில், தமது வருடாந்திர உற்பத்தி திறன், உள்நாட்டு விநியோகம், கடந்த 18 மாதங்களில், அந்நிறுவனங்கள் மேற்கொண்ட ஏற்றுமதி விபரங்கள், அவற்றின் கூடுதல் திறன்கள் உள்ளிட்ட விபரங்களை ஒவ்வொரு நிறுவனமும் பூர்த்திசெய்ய வேண்டும்.

அடுத்த 2021ம் ஆண்டில், நாட்டில் ஒரு மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பு மருந்து முகாமை நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருவதே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இதன் முதற்கட்டத்தில், சுமார் 250 மில்லியன் இந்தியர்களுக்கு தடுப்பு மருந்து விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 2 டோஸ்கள் தடுப்பு மருந்து வழங்கப்பட வேண்டுமெனில், துவக்கத்தில் குறைந்தபட்சம் 50 கோடி சிரின்ஜ்கள் கைவசம் இருக்க வேண்டியது அவசியம்.

உலகளவில், மிகப்பெரிய சிரன்ஜ் உற்பத்தியாளர்களுள் ஒன்றாக திகழ்கிறது இந்தியா. தற்போதைய நிலையில் ஆண்டிற்கு 100 கோடிக்கும் அதிகமான சிரின்ஜ்களை உற்பத்தி செய்கிறது இந்தியா.

அடுத்த 2021ம் ஆண்டின் நடுப்பகுதியில், இந்தியாவால் 1 கோடியே 40 லட்சம் சிரின்ஜ்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த உற்பத்தியில், ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அரசுக்கு சிரின்ஜ்களை உற்பத்தி செய்து வழங்குதல் மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பாக, சிரின்ஜ் உற்பத்தியாளர்களிடம் கூட்டத்தில் கேட்கப்பட்டதாம்.

இந்தியாவின் தடுப்பு மருந்து திட்டத்திற்கு உதவும் வகையில், தயாரிப்பு செயல்பாட்டில் கூடுதல் முதலீட்டை மேற்கொள்ள சிரின்ஜ் உற்பத்தியாளர்கள் முன்வந்ததாகவும், அதேசமயம், அரசு தரப்பில் கொள்முதல் செய்வது மற்றும் விலை நிர்ணயித்தல் தொடர்பான உத்தரவாத்தை சிரின்ஜ் உற்பத்தியாளர்கள் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம், தற்போது உற்பத்தி நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதிய முதலீடுகள், தொற்றுநோய் பிரச்சினை நீங்கியவுடன் வீணாகிவிடும் என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டதாம்.

மேலும், கிடங்குகளைப் பெறுவது, இணைப்புகள், வழங்கல் இணைப்பு மற்றும் சரக்குப் போக்குவரத்து, மனித வளத்தைப் பெறுவது, தடுப்பு மருந்தை நிர்வகிப்பது, பணியாளர்களுக்குப் பயிற்சியளிப்பது  உள்ளிட்டவற்றில் உள்ள சவால்களும் விவாதிக்கப்பட்டது.