இது அதிமுகவை பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியா?

எம்ஜிஆர் என்ற பிம்பத்திற்கு தமிழக அரசியலில் எப்போதும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால், தற்போதைய தேர்தல் சூழலில், எம்ஜிஆர் என்ற பிம்பம் வேறுமாதிரியான முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது.

விஜயகாந்த் என்ற நடிகர் கட்சித் தொடங்கி, கருப்பு எம்ஜிஆர் என்ற ஒரு அடையாளம் அவரை லேசாக தொற்றிக்கொள்ள ஆரம்பித்தபோது, சற்று மிரண்டுபோன ஜெயலலிதா, ராமாவரம் தோட்டம் சென்று, நாங்கள்தான் உண்மையான எம்ஜிஆர் வாரிசுகள்! என்று மெனக்கெட்டு அறிவிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது.

ஆனால், தற்போது அதிமுகவின் நிலைமை வேறாக இருக்கையில், வாக்குப் பிரிப்பு முகவர்களாக களமிறக்கி விடப்பட்டுள்ளதாக பெரியளவில் கூறப்படும் ரஜினி மற்றும் கமல் போன்றவர்கள், தங்களை எம்ஜிஆரின் வாரிசுகளாகவும், அவரின் ஆட்சியைத் தாங்கள் தர விரும்புவதாகவும் கூறி, பிரச்சாரம் செய்கின்றனர்.

எம்ஜிஆரின் ஆட்சி நல்லாட்சியா? அவர் எப்படியான அரசியல்வாதி? என்ற விவாதமெல்லாம் இங்கே நமக்குத் தேவையில்லை. அதைப்பற்றி பலரும் எழுதி வருகிறார்கள்.

ஆனால், இங்கே, இத்தகைய நபர்களால் எம்ஜிஆர் தூக்கிப் பிடிக்கப்படுவது, அதிமுகவை பலவீனப்படுத்தும்(பீகார் பாணியில்) ஒரு உத்தியா? என்று யோசிக்கத் தோன்றுகிறது.

ஏற்கனவே, அதிமுகவை பலவீனப்படுத்தும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக, டிடிவி தினகரனுக்கு தேர்தல் கமிஷன் மூலமாக, அவர் விரும்பிய குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இரண்டு முக்கிய நடிகர்களும், தங்களை எம்ஜிஆரின் ஆட்களாக பிரச்சாரம் செய்வதன் மூலமாக, அதிமுகவிற்கு விழக்கூடிய எம்ஜிஆர் அனுதாப வாக்குகள் சிதறி, அதன்மூலமாக அதிமுகவை இன்னும் பலவீனப்படுத்தலாம் என்று கணக்குப் போடுகிறதா பாஜக?