காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த விவகாரத்தை பேசித் தீர்க்க, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.   விரைவில் வர இருக்கும் கர்நாடக தேர்தலுக்காக மத்திய அரசு செய்யும் கண்துடைப்பு வேலை இது என்று விமர்சிக்கப்படுகிறது.

காவிரி நீர் பங்கீடு குறித்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் வாரியம் அமைப்பதற்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் காவரி விவகாரத்தில் சுமுக தீர்வு ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உட்பட சில கட்சி எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை பாராளமன்ற வாயிலில் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்து பேச்சு நடத்த தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய நீர்வளத்துறை நடத்த இருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் மார்ச் 9ம் தேதி நடக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு, அதை நிறைவேற்றாமல் பேச்சுவார்த்தை என்று மத்திய அரசு அழைப்பது, எதிர்வரும் கர்நாட மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடக்கும் கண்துடைப்பு நாடகமே என்ற விமர்சனம் எழுந்துள்ளது.