தற்போது, அதிமுக மற்றும் சசிகலா தொடர்பாக நடந்துவரும் களேபரங்கள், ஏதோ, அந்த இருதரப்பார் மட்டுமே சம்பந்தப்பட்டு நடக்கிறது என்பது பொதுவான கருத்தாகவும் பொதுவான புரிதலாகவும் இருக்கிறது.

ஆனால், இதில் மறைந்திருக்கும் மற்றொரு சூட்சுமத்தையும் நம்மால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழ்நாட்டில் தாங்கள் காலூன்ற வேண்டுமானால், திராவிடக் கட்சிகளை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். அதில், அவர்களுக்கு முதலில் சிக்கியது அதிமுக. கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் அவர் மறைந்தபிறகு, அதிமுகவை என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்தார்கள் பாஜகவினர் மற்றும் தற்போதுவரை செய்தும் வருகிறார்கள்.

அவர்களது நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இப்போது நடந்தேறிவரும் சில சம்பவங்கள், அந்தளவிற்கு கூரான பார்வையைப் பெற தவறுகின்றன என்றே சொல்லத் தோன்றுகிறது!

ரஜினியை பெரிதாக நம்பி, அவர் கைவிரித்துவிட்டதால், வேறு வழியின்றி, தான் பலவீனப்படுத்திய அதிமுகவை பலப்படுத்தி, அதன்மூலம் திமுகவை வீழ்த்தும் திட்டத்திற்கே பாஜக வந்துவிட்டது என்பது ஒரு பொதுவான பார்வையாக இருக்கிறது. ஆனால், தற்போதைய நிகழ்வுகளை வேறொரு வகையில் ஊன்றிப் பார்த்தால், அதில் பாஜகவின் மற்றொரு செயல்திட்டம் ஒளிந்திருப்பதைக் காண முடிகிறது.

தற்போது, ஏதோ சசிகலாவும், எடப்பாடி குழுவினரும் மோதிக்கொள்வதாக மட்டுமே பார்வையாளர்கள் பலரால் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், இந்த மோதலை பாஜக தரப்பு திட்டமிட்டு கூர்மைப்படுத்துகிறது என்ற விதத்திலும் சந்தேகங்கள் எழுகின்றன.

தற்போது சசிகலாவை தீவிரமாக எதிர்க்கும் அதிமுக தலைவர்கள், மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மத்திய மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் இதுதொடர்பாக சீனில் வருவதில்லை. அவர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து சசிகலாவை எதிர்த்துப் பேட்டியும் தருவதில்லை.

இப்போது, அதிமுகவைப் பொறுத்தவரை, மேற்கும் வடக்கும் ஒரு பிரிவாகவும், மத்தியும் தெற்கும் மற்றொரு பிரிவாகவும் தனித்து நிற்கும் ஒரு சூழல் தென்படுகிறது. சசிகலா வருகையை முன்வ‍ைத்து, இந்தவிதமான ஒரு ஆட்டத்தை பாஜக ஆடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில், அதிமுக மற்றும் திமுகவைப் பொறுத்தவரை, தமிழகம் முழுவதும் பரவலான ஓட்டு வங்கியை வைத்திருப்பவை என்ற போதிலும், இரு கட்சிகளும், மாநிலத்தின் சில பகுதிகளில், ஒன்று மற்றொன்றைவிட அதிகம் வலுவாக இருப்பவை.

இப்போது அதிமுகவை பலவீனப்படுத்துதல் என்ற தனது அஜெண்டாவின்படி, அதிமுகவை பிராந்திய ரீதியாக பிளவுபட வைத்து, ஒரே தலைமையின்கீழ் எதிர்காலத்தில் அந்தக் கட்சியின் வாக்குகளை சேரவிடாமல் தடுப்பது என்ற உத்தியை பாஜக செயல்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

அதிமுகவின் வாக்கு வங்கியில், பிராந்திய ரீதியான பிளவையும், வெறுப்புணர்வையும் ஏற்படுத்தி, அதன்மூலம், சாத்தியமுள்ள பகுதிகளில் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது என்ற திட்டத்தை பாஜக முன்னெடுத்துச் செல்கிறதோ என்ற புரிதல் உண்டாவதை தவிர்ப்பதற்கில்லை!

பாஜகவின் இந்த திட்டத்திற்கு, அதிமுகவின் இரு பிரிவினருமே தங்களை அறியாமல் பலியாகிறார்களோ! என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இந்தப் பிராந்திய ரீதியான வெறுப்பரசியல், எதிர்வரும் நாட்களில் வலுவடைந்தால், அது வேறுவகையான பல விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம். மாநிலப் பிரிவினைக்கும் இட்டுச் செல்லக்கூடும். தமிழ்நாட்டில் ஏற்கனவே வலுவாக இருக்கும் சாதிய ஆதரவு அரசியல், இன்னும் மோசமான நிலைமையை எட்டலாம்! திமுகவிற்கு மாற்றாக இருக்கும் அதிமுக என்ற கட்சி மிகப்பெரியளவில் பலவீனப்பட்டு, அந்த இடத்தில் பாஜக வலிமை பெறலாம்!

எனவே, சம்பந்தப்பட்டவர்கள், தங்களுக்காக விரிக்கப்பட்டுள்ள வலையைக் கண்டறிந்து, அதில் சிக்காமல் தப்புவார்களா..?

 

– மதுரை மாயாண்டி