சென்னை:

கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு 24ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்து உள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொலை சம்பவங்களில் முதல்வர் எடப்பாடிக்கு பங்குண்டு என்று அதிர்ச்சிகரமான வீடியோவை கடந்த வாரம் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அதைத்தொடர்ந்து கொடநாடு  விவகாரம் குறித்த பிரச்சினையை கவர்னர் கவனத்துக்கு தி.மு.க. கொன்று சென்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் ராஜ்பவன் சென்று கவர்னரை சந்தித்து, மனு அளித்தார். அப்போது, கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், திமுக மனுமீது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடைபெறும்என ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

வரும் 24ந்தேதி (நாளை மறுதினம்- வியாழக்கிழமை) ஆளுநர் மாளிகை எதிரில் காலை 10 மணி அளவில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘கொடநாடா.. கொலை நாடா?..

முதல்வரே பதவி விலகு..!

கவர்னரே நடவடிக்கை எடு..!’

தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நாள்: 24-1-2019 நேரம்: காலை 10.00 மணி

இடம்: சென்னை ஆளுநர் மாளிகை எதிரில்.