நெட்டிசன்:

பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர ஸ்ரீராம் நாராயமனன் Sriram Narayanan முகநூலில் ரொம்பவே பிரபலம். காரணம், இவரது மோடி ஆதரவு அல்ல.. இவர் வழங்கும் நிதி ஆலோசனைகள். பங்கு மார்க்கெட், நிதி முதலீடு என்று இவரது ஆலோசனைகளை ஆவலுடன் படிப்பவர்கள் அதிகம்.

சமீபத்திய மத்திய அரசின் பட்ஜெட் குறித்த இவரது முகநூல் பதிவு:

மோடி சார்.. உங்க கட்சியை பல ஆண்டுகளாகவும், உங்களை சில ஆண்டுகளாகவும் ஆதரித்து வந்திருக்கிறேன்.. நான்கு ஆண்டுகளுக்கு முன் எலெக்சன் ரிசல்ட்ஸ் அன்னிக்கு அதிகாலை 4 மணி வரை கண் முழித்து (நான் இருப்பது அமெரிக்காவில்) உங்க வெற்றியைக் கொண்டாடினேன்.. நான் மட்டுமல்ல ஊழலற்ற ஆட்சியை விரும்பிய பலரும் நம்பிக்கையுடன் இருந்தனர். பங்குச் சந்தையும் கூட உங்க வெற்றியை கொண்டாடியது.

உங்களுக்கு ஓட்டு போட்டு, உங்க வெற்றியை தன் வெற்றியாகக் கொண்டாடிய நடுத்தட்டு இந்தியர்களுக்கு நான்காண்டுகளில் என்ன செஞ்சிருக்கீங்க பிரதமரே?
73 வெளிநாட்டுப் பயணங்கள், இன்னும் ஏழு ப்ளான்ல இருக்குன்னு விக்கிபீடியா சொல்லுது – நானும் முதலில் அயல் நாட்டு உறவு மேம்படணும் அதுக்கு பிரதமர் விஜயம் அவசியம்னும் முட்டு கொடுத்துக்கிட்டுதான் இருந்தான், இருந்தாலும் 80 பயணங்கள் எல்லாம் ஓவர் இல்லையா பிரதமரே? அப்படி 70க்கும் மேற்பட்ட பயணங்களில் ரிலையன்ஸ் அதானிக்கு கிடைத்த காண்ட்ராக்ட்கள் தவிர இந்தியாவுக்கு கிடைத்த பலன் வண்டிச் சத்தத்தை விடவாவது அதிகமாக இருக்குமா?

இது போதாதுன்னு 650கோடிக்கு புது ப்ளேன் வாங்கறீங்களாமே? அமெரிக்கா ஒண்ணுக்கு நாலு ஏர்ஃபோர்ஸ் ஒன் ப்ளேன் வச்சிக்கும் – அஞ்சும் பத்தும் வாங்கற நமக்கு அதெல்லாம் தேவையா பாஸு??

ஜனாதிபதிக்கு ஆண்டுக்கு அறுபது லட்சம் துணை ஜனாதிபதிக்கு 48 லட்சமாமே.. சுய நினைவோடுதான் நீங்களும் ஜெட்லி சாரும் இதை எழுதினீங்களா? இல்ல அடுத்து நீங்களும் அவரும் அவ்விரு பதவிக்கு போறதா முடிவு பண்ணிட்டீங்களா?

ரெண்டு பேர் சம்பளத்தை ஒரு கோடி ஆக்கின நீங்க நடுத்தட்டு மக்களை தெருக்கோடியில் நிறுத்தீட்டீங்களே பிரதமரே? டீமானிடைசேசன் ஆகட்டும், சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆகட்டும் தூய்மை இந்தியாவாகட்டும், யோகா தினமாகட்டும் உங்க எல்லா கோமாளி சேட்டைகளையும் பாரத் மாதா கி ஜெய்னு முழக்கமிட்டு சப்போர்ட் பண்ண மிடில் க்ளாஸுக்கு இதுவரை நீங்க செஞ்சது என்ன?

பணமதிப்பிழப்பு போது எல்லாரும் திட்டினபோதும் இதன் பலனை அடைய காத்திருக்கணும்னு சொன்னேன்… என்ன பலன் அது எப்போ வரும்னு எல்லாரும் என் கிட்ட கேக்கறாங்க.. நான் என்ன பதில் சொல்லட்டும் மோடி சார்?
அப்படி ஏதாவது பலன் என்று இருந்தால் என் ஆயுள் காலத்துக்குள் அது வந்துடுமா சார்? முட்டுக் கொடுத்தவங்களை இப்படி மூத்திர சந்துக்குள் அனாதையா விட்டுட்டீங்களே இது நியாயமா?

நீண்ட கால பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்? டீமானடைசேசன் எதுக்காக செஞ்சீங்க? அத்திட்டம் வெற்றியா தோல்வியான்னு ஏன் நீங்களோ நிதியமைச்சரோ ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை? கருப்புப் பண ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு இப்படி நாங்களே எங்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் சொல்லி உங்களை சப்போர்ட் பண்ணோம். உங்க அரசு சொன்ன அளவுக்கு மேல பணம் வந்துச்சு அது எப்படின்னு தெரியல, இன்னும் கட்டு கட்டா பணம் பிடி பட்டுக்கிட்டு இருக்கு அது எப்படின்னு தெரியல. லஞ்சம் கருப்புப்பணம், பயங்கரவாதம் எதுவும் இன்னும் ஒழிஞ்சதாத் தெரியல. தன் பணத்தை தான் எடுக்க மணிக்கணக்குல ஏடிஎம் வாசலில் நின்றவனுக்கு பிரதி உபகாரமா என்ன பண்ணீங்க பிரதமரே?

எதிர்கட்சியில் இருந்த போது அஞ்சு லட்சம் வரை வரி விலக்கு கேட்ட ஜெட்லி இப்போ அதை அமல் செய்யும் இடத்தில். அஞ்சு வருசமா அதை ஏன் செய்யவில்லை அவர்? இந்திரா காந்தி காலத்தில் 90% என்றிருந்த வருமான வரி படிப்படியாக குறைந்த போதும் வருமானம் கூடிக்கொண்டுதான் இருந்திருக்கு. 5 லட்சம் வரை வரி விலக்கு, 5-10 லட்சம் வரை 10 அல்லது 15 % வரின்னு ஆக்கினா வருமானம் கூடுமே தவிர குறையாது. வரி ஏய்ப்பு செய்யறவன் செஞ்சிக்கிட்டுதான் இருக்கான், வேலைக்குப் போகும் நடுத்தர இந்தியன் முதுகில் மட்டும் மூட்டையை ஏத்திக்கிட்டே போறீங்களே – அவன் முதுகொடிந்து சரிந்து விழுந்தால் உங்க மூட்டையை அப்புறம் யார் சுமப்பார்கள்?

ஜி எஸ் டி– ஆபரேசன் சக்சஸ் பேசண்ட் டைட் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு, ஒரு நல்ல திட்டத்தை எப்படி மோசமா இம்ப்ளிமெண்ட் செய்யணும்னு உங்க அட்மினிஸ்ட்ரேசன்கிட்டதான் கத்துக்கணும். திட்டமும் சாஃப்ட்வேரும் அரையும் குறையுமா இருக்கும் போதே திட்டத்தை அமல் படுத்தணும்னு என்ன கட்டாயம் மிஸ்டர் மோடி?

இந்தியாவில் வசிக்கா விட்டாலும் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாவிட்டாலும், ஆண்டுதோரும் வருமான வரி, வீட்டு வரி, STT, DDT, Cess என்று எல்லாத்தையும் செலுத்தி வருகிறேன். கடந்த முறை இந்தியா வந்த போது சுமார் 7 லட்சரூபாய் பொருட்களுக்கு ஜிஎஸ்டி கட்டினேன். அப்பொருட்களை இந்தியாவில் உபயோகிக்காததால் அது எனக்கு திரும்ப கிடைத்திருக்கணும். மிக மோசமாக இம்ப்ளிமெண்ட் செய்யப்பட்ட ஜி எஸ் டி யில் ரீஃபண்ட் அப்போது அறிமுகம் செய்யப்படவேயில்லை. இந்த லட்சணத்தில் இருக்கு உங்க அட்மினிஸ்ட்ரேசன்

ஆதார் அட்டை நல்ல விசயம்தான் இல்லேங்கல, அதுக்காக சலூன் தவிர வேற எங்கயும் ஆதார் இல்லாம உள்ள நுழையக் கூட முடியாதுன்னா நல்லாவா இருக்கு? ஆதார் தரும் போதே எல்லா தகவல்களையும் வாங்கறீங்க இல்ல அப்புறம் நானெதுக்கு அதையும் பான் நம்பரையும் இணைக்கணும்? ஆதார் வந்தப்புறம் பான் நம்பர் எதுக்கு? ஏன் ஆதார் நம்பரை மட்டும் வச்சி வருமானவரி செலுத்தக்கூடாது? பான் நம்பர் வச்சித்தான் வருமான வரி செலுத்தணும்னா இரண்டையும் இணைப்பதால் நாம் சாதித்தது என்ன?

எல்லா இடத்திலயும் எல்லாத்தையும் இணைச்சப்புறம் தகவல்களை பாதுகாக்க உங்க அரசு என்ன செஞ்சிருக்கு, என் தகவல்கள் பாதுகாப்பா இருக்கும்னு உங்க அரசால் உத்தரவாதம் தர முடியுமா?

நீங்க ஆட்சி செஞ்ச குஜராத்தில் விவசாயிகள் விலையில்லா மின்சாரம் கேட்கவில்லை தடையில்லா மின்சாரம்தான் கேட்கிறார்கள் அதைத் தந்தேன் என்று பறை சாற்றினீர்களே மோடி அவர்களே? அதை உங்க நிதியமைச்சர் ஜெட்லியிடம் சொல்ல வில்லை போலிருக்கு. அவர் பாட்டுக்கு விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கிக்கொண்டேயிருக்கிறார் – சிறு / குறு விவசாயிகளுக்கு எவ்வளவு வேணா கொடுக்கலாம் – கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் விவசாயிகள் ஏன் வருமான வரி செலுத்தக்கூடாது? மேலும் அரசியல்வாதிகளின் லஞ்சப்பணம் எப்படி விவசாய வருமானமாக உருவெக்கிறது என்பது சாமானியனா எனக்கேத் தெரியும்போது உங்களுக்கு அது எப்படி தெரியாமல் போச்சு பிரதமரே?

வங்கிகள் : கடந்த ஐந்தாண்டில் வட்டியை குறைத்ததைத் தவிர வேறெந்த வேலையும் அவர்கள் செய்ததாகத் தெரியவில்லை. நிதி அமைச்சகமும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. வாராக்கடன் அதிகரித்துக்கொண்டே போகிறது.. இந்திய வங்கிகளும் அமெரிக்க வங்கிகளைப் போல் அரசிடம் கையேந்தும் நிலை வருவதற்குள் ஏதாவது செய்யுங்க மோடி சார்.

அப்புறம் … ஸ்விஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வாங்கி வெளியிடுவோம்னு யாரோ சூளுரைச்சதா ஞாபகம்.. உங்களுக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா பிரதமரே? ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், பஹாமாஸுக்கு 2 பில்லியன் டாலருக்கு ஆயில் ஏற்றுமதி செஞ்ச ரிலையன்ஸ் கணக்கு, செஷல்ஸ் & மாலத்தீவுகளின் வழியே நடந்த ட்ரான்சாக்சன்கள், உலகிலேயே வேறெங்கும் இல்லாத அதி அற்புத கண்டுபிடிப்பான பார்ட்டிசிப்பேட்டரி நோட் – இப்படி எந்த பொருளாதாரக் குற்றங்களையுமே நாலு வருசமா கண்டுக்கலயே நீங்க, அது ஏன் பிரதமரே?
நீங்க நாட்டுக்குப் பிரதமரா? இந்தி மொழிக்காவலரா? குஜராத்தியான உங்களுக்கு இந்திமேல அப்படி என்ன ஒரு காதல்? நாட்டின் பட்ஜெட்டையெல்லாம் இந்தியில் படிப்பது என்ன ஒரு மனநிலை?

வெற்றிகள் பல கண்டவர் நீங்க. குஜராத்தில் உங்களை நீண்ட காலமாக யாரும் தோற்கடிக்க முடியவில்லை, போன பொதுத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றி கண்டீர்கள் அப்புறம் இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கை காவி வெற்றிகொண்டது.. தமிழகத்தில் வெற்றி வாய்ப்பில்லைனா அதை பெருந்தன்மையா ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே? அதை விட்டு இப்படி ஒரு நிழல் அரசாங்கம் நடத்த வேண்டிய அவசியமென்ன.. இங்கு நடக்கும் கேவலங்களை பார்த்துக்கொண்டும் வாளாயிருப்பது ஏன் பிரதமரே?

உங்களைத் தொடர்ந்து ஆதரிக்க என்னிடம் வேறு காரணங்கள் இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் தெரியப்படுத்தவும்.

இப்படிக்கு
ஓர் அப்பாவி இந்தியன்
ஸ்ரீராம் நாராயணன்.
ஜெய் ஹிந்த்