தமிழர்களுக்கு வெட்கமில்லையா?- கட்ஜூ காட்டம்!

--

 

டெல்லி:

எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டதில் தமிழர்களுக்கு வெட்கமில்லையா? என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ வினவியுள்ளார்.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களி்ல் சர்ச்சையான கருத்துகளை உடனுக்குடன் பதிவுசெய்வதில் மார்கண்டேய கட்ஜூக்கு முதலிடம் உண்டு. இதேபோல் அவர் தன்னை தமிழன் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார்.

தமிழகத்தில் அரசியல் குழப்பம் நிலவும் இந்தச்சூழலில் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து தனது விமர்சனத்தை  முகநூலில் எழுதியுள்ளார்.  அதில், சசிகலாவின் தீவிர ஆதரவாளரான பழனிச்சாமி முதலமைச்சராக்கப்பட்ட நிலையில் தமிழக மக்கள் எதிர்ப்புத்தெரிவிக்காமல் இருப்பதேன்? என்று ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சேர, சோழ, பாண்டியர்களின் சந்ததியனராகவும், திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஆண்டாள், சுப்பிரமணிய பாரதி ஆகியோரின் பரம்பரையினராகவும் இருக்கும் தமிழர்கள் எடப்பாடியை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டது வெட்கமில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுமட்டுமின்றி, “ நானும் ஒரு தமிழன் என்று பெருமை பேசிக்கொண்டிருந்தேன். இனி எந்தமுகத்துடன் நான் அப்படி சொல்லமுடியும்” என மார்கண்டேய கட்ஜூ வருத்ததுடன் கூறியுள்ளார்.