சென்னை:

ண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் தி.நகர், குறிப்பாக ரங்கநாதன் தெரு இந்த ஆண்டு, மக்கள் கூட்டமின்றியும், வியாபாரமின்றியும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், மக்களை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் கலங்கிப்போய் உள்ளனர்.

சென்னையிலேயே பண்டிகைகால வியாபாரங்களுக்கு பெயர்போனது தி.நகர். இங்குள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், பக்ரீத் உள்பட பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தால் தத்தளிக்கும்.

அந்த பகுதியில் ஏற்படும் மக்கள் கூட்டம் காரணமாக பண்டிகை காலங்களில் வாகன நெரிசல் ஏற்படுவதும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு  அளிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்து வருவர்.

ஆனால், சமீப காலமாக டிஜிட்டல் மோகம் மக்களிடையே அதிகரித்து வருவதாலும, பிரபலமான கடைகள் பல நகரத்தின் பல பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளதாலும், தி.நகர் நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இதற்கிடையில், ஆன்லைன் நிறுவனங்களில் அதிரடி சேல், டிஸ்கவுண்ட் போன்ற அறிவிப்புகளாலும், பொது மக்கள் தி.நகர். வண்ணாரப்பேட்டை போன்ற இடங்களுக்குச் சென்று தங்களுக்கு தேவையான துணிமணிகைள வாங்குவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்த ஆண்டு, எப்போதும் இல்லாத அளவுக்க தி.நகரின் முக்கிய சாலைகளான உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெருபோன்ற  பகுதிகள் மக்கள் கூட்டமின்றி சாதாரண நாட்களைப் போலவே காணப்படுகின்றன.

இந்த பகுதிகளில் பண்டிகை காலங்களில் நடைபெறும் வியாபாரத்தை நம்பி ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகளும் பிழைப்பு நடத்தி வரும் நிலையில், இந்த ஆண்டு அவர்களின் பிழைப்பில் மண் விழுந்துள்ளது.

இதுகுறித்து கூறும் ரங்கநாதன் தெரு வியாபாரி ஒருவர்,  கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என்று வருத்தப்பட்ட நிலையில், முக்கியமான பிரபல கடைகள், தங்களது கிளை நிறுவனங்களை தி.நகரில் பல இடங்களிலும், புரசைவாக்கம், குரோம்பேட்டை,  பாடி, தாம்பரம், பள்ளிக்கரனை போன்ற இடங்களில் தொடங்கவிட்டதால், அந்த பகுதிகளில் உள்ள மக்கள் அங்கேயே தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி விடுகின்றனர். இதனால் தங்களின் வியாபாரம் படுத்து விட்டது என்று கூறினார்.

மற்றொரு வியாபாரியான தங்கவேல் கூறும்போது, , இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி,  ஆரம்பத்தில் வியாபாரம்  சூடுபிடித்த நிலையில் தொடர்ந்து வியாபாரம் நல்லா இருக்கும் என எதிர்பார்த்போம், ஆனால், கடந்த சில நாட்களாக வியாபாரம் மிகவும் மோசமாக உள்ளது என்று  வேதனை தெரிவித்தார். இதற்கு முக்கிய காரணம்,  ஆன்லைன் வர்த்தகம்தான் என்றும் குற்றம் சாட்டினார்.

மோடியின் டிஜிட்டல் மயம் நாட்டின் தொழில்வளத்தை அடியோடு முடக்கி வருவது கண்கூடாக காண நேரிடுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, சிறுதொழில்கள் அடியோடு அழிந்து வருவதற்கு, தி.நகர் பகுதி சாலையோர வியாபாரிகளின் மனக்குமுறலும் ஒரு எடுத்துக்காட்டு.

வெறிச்சோடி காணப்படும் தி.நகர்