இது டெஸ்ட் போட்டியா? அல்லது ஒருநாள் போட்டியா? அல்லது டி-20 போட்டியா?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே தற்போது அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டி, டி-20 போட்டியாக மாறியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, தனது முதல் இன்னிங்ஸில், 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி தாக்குப்பிடித்த மொத்த ஓவர்கள் 48.4 மட்டுமே. அந்த அணியின் துவக்க வீரர் கிராலே மட்டும் அதிகபட்சமாக 53 ரன்களை அடித்தார்.

பின்னர், இந்திய அணி களமிறங்கி, 145 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தாக்குப்பிடித்த மொத்த ஓவர்களின் எண்ணிக்கை 53.2 மட்டுமே.

பின்னர், இரண்டாம் நாளில், 2வது செஷனில், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து. ஆனால், அந்த அணி அந்த செஷனிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து, தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டது. தாக்குப்பிடித்த மொத்த ஓவர்கள் 30.4 மட்டுமே.

இதன்மூலம், இந்திய அணியின் வெற்றிக்கு 49 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது. இது உணவு இடைவேளை நேரம்.

ஆக, இந்தப் போட்டியை எடுத்துக்கொண்டால், இது அதிகாரப்பூர்வமாக டெஸ்ட் போட்டி! ஆனால், ஓவர்கள் அடிப்படையில் பார்த்தால் ஒருநாள் போட்டி! அதேசமயம், ரன்கள் அடிப்படையில் பார்த்தால் இது டி-20 போட்டி!

ஆக, கிரிக்கெட்டின், 3 வகைகளையும்(டெஸ்ட், ஒருநாள் & டி-20) தன்னுள் அடக்கிய ஒரே  போட்டி இதுதான்!