டோக்கியோ: ஒலிம்பிக் தொடரை ஒத்திப்போடுவது தொடர்பாக ஜப்பான் அரசு யோசிக்கத் துவங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

ஒலிம்பிக் நிர்வாகக் கமிட்டியைச் சேர்ந்த 2 அதிகாரிகள், “ஒலிம்பிக் தொடரை ஒத்திவைப்பது தொடர்பாக, இப்போதுதான் ஜப்பான் அரசு பேசத் தொடங்கியுள்ளது” என்று தகவலை கசிய விட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகைப் பிரித்து மேய்ந்த வந்தாலும், போடப்பட்டிருக்கும் வெயிட்டான முதலீட்டின் காரணமாக, ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று பிடிவாதமாக பேசிவந்தார் ஜப்பான் பிரதமர்.

ஒலிம்பிக் ஜோதி கூட, கிரீஸ் நாட்டிலிருந்து ஜப்பானுக்கு வந்துசேர்ந்து விட்டது. இந்நிலையில் பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தரப்பிலிருந்து ஒலிம்பிக் தொடரை தள்ளிவைப்பது தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், தற்போது ஜப்பானும் தன் நிலையிலிருந்து இறங்கிவந்து, மாற்று ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக யோசிக்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒலிம்பிக் தொடரைப் பிடிவாதமாக ஆரம்பித்து, இடையில் நிறுத்துவதைவிட, தொடரையே முழுமையாக ஒத்திவைப்பது மேல் என்ற நிலைக்கு அந்த நாடு வந்துள்ளதாக கூறப்படுகிறது.