டெல்லியைப் பின்பற்றுகிறதா ஜார்க்கண்ட்? – வரிசை கட்டுமா கவர்ச்சித் திட்டங்கள்?

ராஞ்சி: டெல்லியைப் போன்றே ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பல இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக அம்மாநில அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ள அர்விந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன். இவர், ஜேஎம்எம் – காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக பதவி வகிக்கிறார்.

‍கெஜ்ரிவாலை சந்தித்ததையடுத்து, டெல்லியைப் போன்ற இலவச திட்டங்களை, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து வீடுகளுக்கும் குறிப்பிட்ட யூனிட் வரை இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள், காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரத்திலேயே அறிவிக்கப்பட்டன.

தற்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டமும் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டெல்லியைப் போன்று அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.