டில்லி ஜும்மா மசூதி பாகிஸ்தானில் உள்ளதா? : அரசு மீது டில்லி உயர்நீதிமன்றம் கடும் கோபம்

டில்லி

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஜாமீன் வழக்கின் விசாரணை இன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

நாடு முழுவதும்  குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராட்டம் நடந்து வருகிறது. டில்லியில் நடந்த போராட்டங்களை பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தீவிரமாக நடத்தி வந்தார்.   கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி அன்று டில்லி ஜம்மா மசூதியில் இவர் போராட்டம் நடத்தினார்.   இப் போராட்டம் அமைதியாக நடைபெற்றது என்றாலும் காவல்துறையினர் இவரைக் கைது செய்தனர்.

 

சந்திரசேகர் ஆசாத்

அதையொட்டி சந்திரசேகர் ஆசாத், ஜாமீன் பெற முயன்று வருகிறார்.  இன்று இவர் ஜாமீன் மீதான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.   டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி காமினி லாவ் இந்த வழக்கை விசாரித்தார். விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

நீதிபதி முதலில்  சந்திரசேகர் ஆசாத்திற்கு எதிராக முதல் தகவலறிக்கையில் என்ன இருக்கிறது என்று நீதிபதி முதலில் கேட்ட தற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரியாது என்று கூறவே நீதிபதி கோபம் அடைந்தார்

அதன் பிறகு அரசு தரப்பு வழக்கறிஞர், சந்திரசேகர் ஆசாத் வன்முறையைத் தூண்ட பார்க்கிறார் எனவும் அவரின் முகநூல் பதிவு எல்லாம் வன்முறையைத் தூண்டும் வண்ணம் இருக்கிறது என்றும் கூறினார்.

சந்திரசேகர் ஆசாத்தின் முகநூல் பக்கத்தைப் பார்த்த நீதிபதி காமினி, சந்திரசேகர் ”ஆசாத் அப்படி எதுவும் பதிவு செய்யவில்லை.  மாறாக மக்களைத் தர்ணா செய்ய அழைத்துள்ளார். தர்ணா செய்ய மக்களை அழைப்பதில் என்ன தவறு?    போராட்டம் செய்தால் தவறா? போராட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. என்றும் அரசு தடுக்கவோ அதற்கு எதிராகக் கைது செய்யவோ கூடாது” என்று கூறினார்.

அரசு வழக்கறிஞர் டில்லியில் அப்போது ஜம்மா மசூதி அருகே 144 இருந்தது என்று கூறினார்.   மீண்டும் கோபம் அடைந்த நீதிபதி, ”ஏன் எப்போதும் 144 போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் . அவசியம் இல்லாமல் 144 போடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது நினைவில் இருக்கிறதா?

சந்திரசேகர் ஆசாத் வன்முறையைத் தூண்டவில்லை.   மேலும் ஜும்மா மசூதி ஒன்றும் பாகிஸ்தானில் கிடையாது. ஆகவே அங்கு அவசியம் போராட்டம் செய்யலாம்.    மேலும்  ஜும்மா மசூதி பாகிஸ்தானில் இருந்தால் கூட, அவர் விசா எடுத்துக் கொண்டு அங்குச் சென்று போராட்டம் செய்யலாம்.  அவ்வளவு ஏன்  பாகிஸ்தானும் ஒரு காலத்தில் இந்தியாவில்தான் இருந்தது,:  என்று நீதிபதி கூறினார்.

இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார். இந்த வழக்கை நாளை விசாரிப்பதாகக் கூறி நீதிமன்றம் தள்ளி வைத்தது.

கார்ட்டூன் கேலரி