பாஜகவில் இணைந்துவிட்டாரா காடுவெட்டி குருவின் மகன் கனலரசன்….?

சென்னை:

ன்னியர் சங்கத் தலைவரும், பாமக தலைவர் ராமதாசின் வலதுகரமாக திகழ்ந்தவருமான மறைந்த காடுவெட்டி ஜெ.குருவின் மகன் கனலரசன் பா.ஜ.க-வில் இணைந்துள்ளது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. இது வன்னியர் இன மக்கள் மற்றும் பா.ம.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னாருக்கு சால்வை போர்த்தும் கனலரசன்

வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு கடந்த 2018ம் ஆண்டு  உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். குருவுக்கு டாக்டர் ராமதாஸ் எந்த உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குருவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றும், அதற்கு ராமதாஸ் உடன்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. குருவின் குடும்பத்தினரும் ராமதாஸ் மீது பழி சுமத்தினர்.

இதனால் பாமகவிலும், வன்னியர் சங்கத்திலும் புகைச்சல் எழுந்து வந்தது. இந்த நிலையில், பாமகவில் இருந்து நீக்கப்பட்ட விஜிகே மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள்  குரு பெயரில்  புதிய கட்சி தொடங்கப்போவதாக  தெரிவித்து வந்தனர்.  ராமதாசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை குரு குடும்பத்தினர் வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜெ.குருவின் மகன் கனலரசன் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த படத்தில், குருவின் மகன் கனலரசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னாருக்கு  சால்வை அணிவிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே பாஜக கூட்டணியில் பாமக உள்ள நிலையில், கனலரசன் பாஜகவில் இணைந்துள்ளதாக செய்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.