கமல்ஹாசன் தீவிரவாதியா, பயங்கரவாதியா? : காயத்ரி ரகுராம்

நாதுராம் கோட்சேவை மேற்கோள் காட்டி கமல்ஹாசன் பேசிய கருத்துக்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசுகையில் “இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார் கமல். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

“வேறொரு மதத்தினர் வசிக்கும் பகுதியில், இந்து மதத்தைக் குறிப்பிட்டு அவர் பேசியது ஏன்? இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்தானே… தீவிரமானவர்தானே? இந்துக்களுக்கு கமல்ஹாசன் தீவிரவாதியா, பயங்கரவாதியா?. தவறான வார்த்தைகளை நியாயப்படுத்தாதீர்கள். அவரது வார்த்தைகள் முட்டாள்தனமானது” எனத் தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்..