ஜெ., வாழ்க்கை வரலாற்று படத்தில் எம்.ஜி.ஆராக கமல்?

பாரதிராஜா இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது. இதில் எம்.ஜி.ஆராக கமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பலத்த போட்டி நிலவுகிறது.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்க இருப்பதாக முதலில் விஜய் அறிவித்தார். தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை விப்ரி மீடியா சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரிக்கிறார். இவர் தென்னிந்திய மொழிகளுக்கு வெளிநாட்டில் விருது வழங்கும்  ;சைமா  விழா வை நடத்தி வருபவர்.  மேலும், 83 ஆம், ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து ஒரு படத்தையும்,  ஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமான  என்.டி. ராமராவ்  சுயசரிதையை ஒரு படமாகவும் தயாரித்து வருகிறார். இதற்கிடையே ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை தயாரிக்க இருப்பதாக அறிவித்த இவர், ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி  படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க இருப்பதாக  பெண் இயக்குனரான பிரியதர்ஷினியும் அறிவித்திருக்கிறார்.  இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது வரலட்சுமி நடிக்கும் சக்தி  என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அவர், “ஜெயலலிதா ஓர் இரும்பு பெண்மணியாக வாழ்ந்தவர். அவரது வாழ்க்கை பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. அவரது வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்று முடிவெடுத்து திரைக்கதையை உருவாக்கி வருகிறேன்” என்றார்.

இந்நிலையில் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை கதையை படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறார். இவர் ஒய்-ஸ்டார் சினி மற்றும் டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருபவர்.

பாரதிராஜாவுடன் ஆதித்யா பரத்வாஜ்

இப்படம் பற்றி  ஆதித்யா பரத்வாஜ் கூறும்போது,”பாரதிராஜா இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு தற்காலிகமாக, புரட்சித் தலைவி  என்று டைட்டில் வைத்திருக்கிறோம். சிலர்  அம்மா  என்பதை இதோடு சேர்க்குமாறு தெரிவித்திருக்கிறார்கள். இசையமைக்க இளையராஜாவிடம் பேசியிருக்கிறோம்.. படத்தில் சசிகலா, எம்.ஜி.ஆர் கேரக்டர்களும் வருகின்றன” என்றார்.

எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் கமல் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து கேட்டதற்கு, “எம்.ஜி.ஆராக நடிக்க கமல்ஹாசன் மற்றும் மோகன்லாலிடம் பேசி வருகிறோம்”  என்றார்.

அதே நேரம் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகைகளிடையே போட்டி நிலவுகிறது.