திருச்சி:

னித்தமிழ்நாடு என்பதை மனதில் வைத்து கமல் பேசினாரா என்ற கேள்வி அரசியல்வட்டாரத்தில் எழுந்துள்ளது.

திருச்சியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார். அப்போது   அவர், “காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது. காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் தமிழகம் ஒத்துழைக்க மறுக்கும்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு செய்வது தவறு. மத்திய அரசை அவமரியாதை பேசுவதை நாங்கள் செய்ய மாட்டோம்.

காந்தி காலத்தில்கூட  வெள்ளையனே வெளியேறு என்றுதான் கூறினோம். டே! வெள்ளைக்கார நாயே வெளியேறு என்று சொல்லவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். காவிரி பிரச்சனையை திசை திருப்பாதீர்கள், திசை திருப்பினால், திசை திரும்பமாட்டோம்.  கலவரங்கள் மூலம் திசை திருப்பினாலும் திசை திரும்பமாட்டோம்.  மீண்டும் கோரிக்கை வைத்து உறங்குவர்களை எழுப்பலாம். ஆனால்  உறங்குபவர்களை போல நடிப்பவர்களை எழுப்பவே முடியாது ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான்.  தொடையை தட்டுவது வீரம் அல்ல, ஆனால் தொடையை தட்டவும் எங்களுக்கு தெரியும்” என்று கமல் பேசினார்.

தவிர, “நாங்கள் கைப்பாவையாக இருக்க முடியாது. விழித்தெழு தமிழா.

இது ஒன்றுபட்ட நாடு. ஆனால் இது ஒன்றாக இருக்கவேண்டும் என்ற பதட்டம் எனக்கு இருக்கிறது. விழித்தெழுங்கள் தமிழா” என்று கமல் பேசி முடித்தார்.

நாட்டைவிட்டு வெள்ளையரை வெளியேற்றியதைப்போல மத்திய அரசை சொல்வோம் என கமல் கூறியது மத்திய அரசு அதிகாரம் முழுதும் தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அதாவது,  தனித்தமிழ்நாடு என்பதை மனதில் வைத்து கமல் பேசினாரா என்ற கேள்வி அரசியல்வட்டாரத்தில் எழுந்துள்ளது.

சமீபத்தில் திராவிடநாடு குறித்த பேச்சு அரசியல்வட்டாரத்தில் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம், “கமல் பேசியது பல சமயம் புரியாது. அதுபோல இதுவும் வேறு அர்த்தம் கொடுத்திருக்கலாம். மற்றபடி இந்திய தேசியத்தில் கமல் மிகவும் பிடிப்புள்ளவர். மேலும் நீர் மேலாண்மை,  தொழில் முன்னேற்றம் குறித்தெல்லாம் பேசியிருக்கிறார். அதெல்லாம் இந்திய தேசியத்துக்கு உட்பட்ட கோணத்தில்தான் பேசியிருக்கிறார்” என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.