மும்பை

டந்த வருடம் நடந்த மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஐடி குழு மற்றும் தேர்தல் ஆணையம் ரகசிய தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த வருடம் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் களத்தில் இறங்கின.   இதில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்றும் முதல்வர் பதவிக்கான இழுபறி காரணமாகக் கூட்டணி முறிந்தது.   தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்துள்ளது.  இந்நிலையில் ‘ஜனதா கா ரிப்போர்ட்டர்’ என்னும் ஆங்கில ஊடகம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் காணப்படுவதாவது :

சாகேத் கோகலே என்னும் ஆர்வலர் மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையம் பாஜக ஐடி குழுவை சேர்ந்த ஒருவரின் சேவையைப் பயன்படுத்தி உள்ளது என டிவிட்டரில் பதிந்துள்ளார்.  அவர் அடுத்த பதிவில் மகாராஷ்டிரா தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள விளம்பரங்களில் ’202, பிரஸ்மேன் அவுஸ், விலே பார்லே, மும்பை’ என்னும் ஒரே முகவரியை பயன்படுத்தி உள்ளார் என பதிந்துள்ளார்.

மேலும் சாகேத் கோகலே இதுகுறித்து ஆய்வு செய்ததில் இந்த முகவரி  சைன்போஸ்ட் இந்தியா என்னும் விளம்பர நிறுவனம் எனவும் இது அப்போதைய பாஜக அரசின் ஆதரவு பெற்றது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த முகவரியை சோஷியல் செண்டிரல் என்னும் டிஜிடல் எஜன்சி பயன்படுத்தி வந்ததாகவும் அந்த ஏஜன்சி பாஜக ஐடி குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தேவாங்க் தவே என்பவருக்கு சொந்தமானது எனவும் பதிந்துள்ளார்.

இந்த தேவாங்க் தவே என்பவர் அரசு அமைப்புக்கள், பாஜக, மகாராஷ்டிர மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்காக பணிகளை மேற்கொண்டவர் ஆவார்.  இவர் தி ஃபியர்லெஸ் இந்தியன், ஐ சப்போர்ட் மோடி போன்ற இணையப் பக்கங்களை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.   இவரது வாடிக்கையாளர் பட்டியலில்  அரசுத் துறைகளுடன் பாஜகவும் உள்ளது.  இந்த பக்கங்களில் பாஜக ஐடி குழுவின் தகவல்கள் பதியப்பட்டுள்ளன.

மேலும் சாகேத் கோகலே, “தேர்தல் நேரங்களில் கட்சிகளின் ஐடி குழுவைக் கண்காணிக்க வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினரின் ஐடி குழுவுடன் இணைந்து செயல்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகும்.  இந்தியத் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியான பாஜக ஐடி குழு உறுப்பினருடன் இணைந்து மகாராஷ்டிர தேர்தல் ஆணையர் செயல்பட வேண்டும் என ஏன் முடிவு எடுத்தது?

இது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலைமை விதிமுறைகளுடன் ஒத்துப் போகிறதா?  பாஜகவின் குழுக்களுடன் ஆன தொடர்பு இன்னும் தொடர்கிறதா?  தேர்தல் ஆணையம் இதற்கு அவசியம் பதில் அளிக்க வேண்டும்” எனப் பதிந்துள்ளார்.  இது குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டது.

இதற்குத் தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷேபாலி சரண், “சாகேத் கோகலே வின் டிவிட்டர் பதிவு குறித்து உண்மை அறிக்கையை அளிக்க மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கேட்கப்பட்டுள்ளது.  அத்துடன் உள்ளூர் அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளனரா என்பதையும் விரிவாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம்” எனப் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து தவே எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் தனது பழைய சமூக வலைத்தள பதிவுகளை மீண்டும் பதிந்த வண்ணம் உள்ளார்.

தேர்தல் ஆணையம் சார்பின்மை அற்றதாக இருப்பது என்பது தற்போது இல்லை என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Thanks : JANATA KA REPORTER