மலேசிய அரசியலில் புதிய திருப்பம் : மகாதீர் – அன்வர் மீண்டும் கூட்டணி?

கோலாலம்பூர்

முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் மற்றும் அவர் முன்னாள் கூட்டணியாளர் அன்வர் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவில் ஆட்சி செய்த மகாதீர் மற்றும் அன்வர் கூட்டணியில் பிளவு ஏற்பட்டதன் விளைவாக மகாதீர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.  அவர் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட மலேசிய மன்னர் அவருக்கு இடைக்காலப் பிரதமர் பொறுப்பை அளித்தார்.   அதையடுத்து மகாதீர் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூடும் என அறிவித்தார்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் யாருக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதைத் தீர்மானித்து அவருக்குப் பிரதமர் பதவி வழங்கப்படும் எனவும் யாருக்கும்  பெரும்பான்மை கிடைக்காவிடில் மீண்டும் பொதுத் தேர்தல்  நடக்கும் எனவும் மகாதீர் முகமது தெரிவித்தர்.

வரும் இரண்டாம் தேதி நடைபெற உள்ள இந்த சிறப்பு அமர்வில் யாருக்குப் பெரும்பான்மை உள்ளது என்பது நிரூபிக்கப்பட உள்ளது.  இந்நிலையில் மகாதீர் முகமதுவின் முந்தைய ஆளும் கூட்டணியான அன்வர் கட்சியுடன் மீண்டும் மகாதீர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளி வருகின்றன.

தனக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கும் எனக் கூறிய மகாதீர் முகமது இந்த கூட்டணி குறித்துக் கேட்டபோது ஒன்றும் சொல்ல மறுத்துள்ளார்.   அதைப் போல் அன்வரும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.   ஆனால் இருவரும் கூட்டணி இல்லை என்பதை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்

You may have missed