கொல்கத்தா: அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாகப் பணத்தை செலுத்தும் மேற்குவங்க அரசின் முடிவிற்கு, நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆலோசனை, காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியால் அமைக்கப்பட்ட உலகளாவிய ஆலோசனை அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார் அபிஜித் பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் குடும்பங்களுக்கு, அவர்களின் வங்கிக் கணக்கிலேயே தலா ரூ.20000 செலுத்தப்படும் என்றும், மேலும் கூடுதலாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.28000, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
“டாக்டர்.அபிஜித் பானர்ஜி இந்த ஆலோசனையை சில காலமாகவே சொல்லி வருகிறார். அவரின் ஆலோசனையை முதல்வர் மம்தா ஏற்று செயல்படுத்துகிறார். மற்ற மாநில அரசுகளும், மத்திய அரசும் இவரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்” என்கிறார் மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தபாஸ் ராய்.