வாஷிங்டன்

திபர் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ளுமாறு டிரம்ப்பிடம் மெலானியா வற்புறுத்தியதாகக் கூறப்படுகையில் அவர் நேர்மாறாக டிவீட் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதிபர் டிரம்ப்பை விட அதிக வாக்குகள் பெற்றுள்ள ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக தொடர்ந்து கூறி வருகிறார்.

டிரம்பின் மனைவி மெலானியா அவர் அதிபர் பதவியில் இருந்து விலகியதும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  எனவே இந்த அதிபர் தேர்தல் அவரது அரசியல் வாழ்க்கையில் மட்டுமின்றி குடும்ப வாழ்க்கையிலும் குழப்பங்கள் மூட்டுவதாக கூறப்படுகிறது.

மற்றொரு தகவலில் அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ளுமாறு மெலானியா தனது கணவர் டிரம்பை வற்புறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.   பல விஷயங்களில் தனது கருத்தை அவர் டிரம்பிடம் வெளியிடுவது வழக்கம்.  இதையும் அதைப் போன்று கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் மெலானியா இந்த தகவல்களுக்கு நேர்மாறாக டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த  டிவீட்டில் அவர், “அமெரிக்க மக்கள் நியாயமான தேர்தலுக்குத் தகுதியானவர்கள்.  அனைத்து சட்டப்பூர்வமான வாக்குகளும் சட்ட விரோதம் இல்லாமல் எண்ணப்பட வேண்டும்.  முழுமையான வெளிப்படையான நமது ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.” எனப் பதிந்துள்ளார்.