சென்னை,

மிழக சட்டசபையில் இன்று இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கும், ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை, ஸ்மார்ட் கார்டு, ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட வீடு அரசுடமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ்தோட்டம் இல்லம் குறித்தும், மணி மண்டபம் கட்டுவது குறித்தும் ஜெ.அன்பழகன் பேசிய கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவையை விட்டு வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசினார். அப்போது,  சட்டமன்றத்தில் சபாநாயகர் சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்வதாகவும், சட்டமன்றத்தில்  ஆளுநர் உரை மீதான விவாதம்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஆளுநர் உரை தொடர்பாக திமுக உறுப்பினர் அன்பழகன் பேசியதை அவை குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்குகிறார் என்று கூறினார்.

மேலும்,  ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது தொடர்பாகவும், மெரினாவில் மணி மண்டபம் கட்டுவது குறித்து நேற்று ஆளுநர் வாசித்த உரையில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதுகுறித்து தங்களது கட்சி உறுப்பினர் பேசியதை சபை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கி விட்டார் என்றார்.

சட்டப்பேரவையில், அன்பழகன் பேசும்போது,  உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம் அமைப்பது சட்டவிரோதமானது எனவும் மக்களின் வரிப்பணத்தை, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைப்பது சரியா என பேசினார்.

ஆனால் அவரது பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. ஆளுநருக்கு எதிராக பேசக்கூடாது என  சபாநாயகர்  தெரிவித்து அன்பழகன் கருத்தை நீக்கிவிட்டனர் என்றார்.

அதற்கு நாங்கள்,  ஆளுநருக்கு எதிராகத்தானே பேசக்கூடாது. ஆளுநர் உரை தொடர்பாகத்தான் அன்பழகன் பேசினார என்றும், ஏற்கனவே  ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆளுநர் சென்னா ரெட்டி குறித்து கொச்சையாக பேசியது சட்டசபை அவைக்குறிப்பேட்டில் உள்ளது என்று கூறினார்.

ஜெ. மணிமண்டபம் குறித்த  அன்பழகனின் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்கியதால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என்ற ஸ்டாலின்,  மீண்டும் சட்டமன்றத்துக்குள் சென்று எங்கள் பணியை ஆற்றுவோம் என்றும் கூறினார்.