கருணாநிதியை நலம் விசாரிக்க பிரதம் மோடி இன்று வருகிறார்?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று பிரதமர் மோடி வரக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 27-ம் தேதி குறைந்த ரத்த அழுத்த பாதிப்பால் காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்கு  அனுமதிக்கப்பட்டு தொர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். கடந்த 29-ம் தேதி அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதற்கிடையே தேசிய மற்றும்  மாநில தலைவர்கள், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர், முதல்வர், திரைப்பட பிரபலங்கள் என பலரும் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார்கள்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல் நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியானது.

24 மணி நேரத்திற்குப் பின்னரே எதுவும் கூற முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கருணாநிதி – மோடி (கோப்பு படம்)

இதையடுத்து மருத்துவமனை முன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். . “எழுந்து வா தலைவா” என்று அவர்கள் முழக்கமிட்டபடி உள்ளனர். தொண்டர்கள் அதிக அளவில் மருத்துவனை முன்பு குவிந்துள்ளதால் நேற்றிரவு முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் நேற்றிரவு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மருத்துவமனை வந்து ஸ்டாலின், கனிமொழியிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து திரும்பினார்.

இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி, மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் வந்தால் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்றிரவு மயிலாப்பூர் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் சாரங்கன், கிழக்கு மற்றும் தெற்கு இணை ஆணையர்கள் அன்பு, மகேஸ்வரி மற்றும் துணை ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து காவேரி மருத்துவமனை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.   2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

தற்போது டில்லியில் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்வதால் அதன் பிறகே அவர் வர வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.