புதுடெல்லி: நாட்டின் இரண்டாவது பெரிய சுத்திகரிப்பு நிறுவனமும், எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமுமாகிய பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனில் தன் கட்டுப்பாட்டில் உள்ள பங்குகளை, சர்வதேச எண்ணெய் நிறுவனத்திடம் விற்பனை செய்ய நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு வருவதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் காலங்காலமாக கோலோச்சிவரும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை முற்றிலும் காலிசெய்வதே அரசின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

அந்தத் துறையில் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களை வலிய உள்நுழைத்து அரசு நிறுவனங்களை இல்லாமல் செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தில் அரசின் பங்குகள் 53.3% உள்ளன. இவற்றில் பெரும்பாலான பங்குகளை விற்பனை செய்துவிட திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக செப்டம்பர் 2ம் தேதி ஒரு செய்தித்தாளில் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடிகளை இந்த நடப்பு நிதியாண்டில் திரட்ட வேண்டுமென்பது மோடி அரசின் இலக்கு என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பற்றாக்குறை பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.