`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடிதான் காரணமா?” : ஸ்ரீராம் சேனா தலைவர் சர்ச்சைப் பேச்சு


 

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை குறித்த கேள்விக்கு `கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடிதான் காரணமா?” என்று  ஸ்ரீராம் சேனா தலைவர் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதியன்று மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் அவரது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.  இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வந்ததே கொல்லப்பட்டதற்கான காரணம் என்று கூறப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்த கருத்தையும் தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருவது ஏன்? என்று எதிர்க்கட்சி தலைவர்கள்ள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு, ஸ்ரீ ராம் சேனா அமைப்புத் தலைவர் பிரமோத் முத்தாலிக், `கர்நாடகா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது பகுத்தறிவாதிகள், பத்திரிகையாளர்கள் என நான்கு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  இது குறித்து  யாரும் கேள்வி எழுப்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் தோல்வி என்று விமர்சனம் செய்யவில்லை.

ஆனால், கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேச மறுக்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா என்ன?’ என்று பேசினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கௌரி லங்கே வழக்கு தொடர்பாக ஸ்ரீ ராம் சேனா அமைப்பைச் சேர்ந்த பரசுராமை என்பவரை, சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி.) ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தது. தற்போது அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக எஸ்.ஐ.டி வட்டாரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.