60000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளது நகைச்சுவையா ? : குமாரசாமி காட்டம்

பெங்களூரு

விவசாயக் கடன் தள்ளுபடி மாபெரும் நகைச்சுவை எனபிரதமர் மோடி  கூறியதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறி இருந்தது.   அது போலவே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கு பிரதமர் மோடி உள்ளிட பலரும் விமர்சனங்கள் எழுப்பி உள்ளனர்.  சமீபத்தில் மோடி ஒரு நிகழ்வில், “ விவசாயிகள் அரசின் கவனம் தங்கள் மேல் திரும்ப வேண்டும் என விரும்பும் போது கர்நாடக அரசு திமிராக நடந்து வருகிறது.    அத்துடன் சாதாரண மக்கள் வளர்ச்சியை விரும்பும் போது அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரு பரம்பரையை செல்வ செழிப்புடன் வைக்க விரும்புகிறார்கள்.   கர்நாடக அரசு அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடி என்பது மாபெரும் நகைச்சுவை” என கூறினார்.

இதற்கு கர்நாடக அரசு சார்பில் முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இதுவரை கடன் தள்ளுபடி திட்டத்தால் சுமார் 60000 விவசாயிகள் பலன் அடைந்துள்ள்ளனர்.  விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இதுவரை நாங்கள் ரூ.350 கோடி பணம் அளித்துள்ளோம்.   இன்னும் ஒரு வாரத்தில் மேலும் ரூ.400 கோடி பணம் செலுத்த உள்ளோம்.   இது பிரதமர் மோடிக்கு நகைசுவையாக தெரிகிறதா?

கர்நாடக மாநில கூட்டுறவுத்துறையில் இடைத் தரகர்களாக செயல்பட்டவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.  பல மாநிலங்கள் கர்நாடக அரசு பின்பற்றும் முறையைப் போன்று, தங்கள் மாநிலத்திலும் செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றன.  அது மட்டுமின்றி கர்நாடக அரசின் முக்கிய திட்டங்களில் ஆதார் விவரம், நில ஆவணங்களுக்கு எலக்ட்ரானிக் ஆதாரங்கள், ரேஷன் கார்டு முறை உள்ளிட்டவைகளும் அடங்கும்..

தற்போது தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி உள்ளனர்.   ஆனால் அதைப் பேசுவதை விட்டுவிட்டு கர்நாடக அரசின் முதன்மை திட்டங்களை மத்திய அரசு விமர்சிக்கிறது.”

என குறிப்பிடப்பட்டுள்ளது.

You may have missed