டில்லி

டந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாக ஆகி உள்ள இந்தியப் பொருளாதார நிலையை மோடி வேடிக்கை பார்க்கிறாரா என ஃபோர்ப்ஸ் ஆங்கில ஊடகம் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைக் கண்டு வருவதாகப் பல பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.  நாட்டில் வாகன விற்பனை போன்ற பல துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.   இது குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சரவை கண்டுக் கொள்ளாமல் இருப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து ஆங்கில ஊடகமான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில், ”இந்தியப் பொருளாதாரம் குறித்த விவாதத்தில் முக்கியமாக இடம் பெறுவது  2020 ஆம் வருடம் இந்தியப் பொருளாதாரம் மோசமாகுமா என்பதே ஆகும்.  கடந்த 1978 ஆம் வருடத்தில் இருந்து பொருளாதார வளர்ச்சி 7.5% என கணக்கிடப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போதைய நிலையில் அதிகபட்சமாக 5% வரையில் மட்டுமே பொருளாதார வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.   உலகின் ஜனத்தொகை எண்ணிக்கையில்  இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவுக்கு இது மிகவும் பின்னடைவாகும்.  உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் பொருளாதாரம் மேலும் பின்னடைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகின் பல பகுதிகளிலும் இந்தியப் பொருளாதாரம் குறித்த விவரங்களால் கவலை தெரிவித்து வரும் பொருளாதார வல்லுநர்கள் கடந்த 67 மாதங்களாக இது குறித்து பிரதமர் மோடி ஏன் இந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்விகள் கேட்கின்றனர்.    ஆசியாவின் 3 ஆவது பொருளாதார முன்னணி நாடான இந்தியா தற்போது உள்ள நிலையில் இருந்து முன்னேற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என பலரும் கூறி வருகின்றனர்.

மோடி குஜராத் மாநில முதல்வராகப் பணி புரிந்த 14 வருடங்களில் அவர் ஒரு கதாநாயகன் எனக் கொண்டாடப்பட்டார்.  ஆகவே அவர் நாட்டை குஜராத் பாணியில் முன்னுக்குக் கொண்டு வருவேன் என உறுதி அளித்ததை நம்பிய மக்கள் அவருக்கு வாக்களித்ததால் 2014 ஆம் ஆண்டு ஆட்சியைப்  பிடித்தார்.   அவர் அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைத்தது, வெளிநாட்டு முதலீடுகள் கொண்டு வர முயன்றது போன்றவை அவர் மீது நம்பிக்கையை வளர்த்தது.

ஆனால் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை அவருடைய புகழில் சரிவை உண்டாக்கின.  அதன் பிறகு அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைகளும் விமர்சனத்துக்கு உள்ளாகின.  இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு சாதகமான பல விவகாரங்கள் தற்போது உள்ளன. வர்த்தகப் போர், அமெரிக்க அதிபரின் அதிக வரி விதிப்பு போன்றவை காரணமாக மோடி மீண்டும் 2019 ஆம் வருடம் ஆட்சியை பிடித்வாயர்.  ஆனால் அதை அவர் சரிவரப் பயன்படுத்துகிறாரா என்பதே முக்கிய கேள்வி ஆகும்.

மோடி இந்த நேரத்தில் பல துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.  உதாரணமாக மத்திய அரசு எடுத்துள்ள தொழிலாளர் சட்டம், நிலம் மற்றும் வரிச் சட மாறுதல்களைச் சொல்லலாம்.  ஆனால் அரசு வாராக்கடன்களை வசூல் செய்வதிலும் வங்கி சீர்திருத்தத்திலும் மிகவும் மெதுவான நடவடிக்கைகளை மேற்கொள்வது தவறான நடவடிக்கையாக உள்ளது..

மொத்தத்தில் இந்த நேரத்தில் சரியான நடவடிக்கைகளை எடுத்து இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு பதில் மோடி பல தேவையற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.   நாட்டின் பொருளாதாரம் குறித்த கவலை அவருக்கு இல்லை என தோன்றுகிறது.  கடந்த 42 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் மோசமாக உள்ள நிலையில் அவர் அதை வேடிக்கை பார்க்கிறாரா எனக் கேட்கத் தோன்றுகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளது.