முக்கொம்பு அணைக்கு காய்ச்சலா?: எடப்பாடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

னித உடலுக்கு ஏற்படும் தீடீர் காய்ச்சல் மாதிரி கொள்ளிடம் அணை உடைந்தது என்று தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதை சமூகவலைதளங்களில் பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.
திருச்சி முக்கொம்பில் காவிரியிலிருந்து வெளியேறும் தண்ணீரில் வெள்ள பெருக்கு ஏற்படாத வண்ணம்   கொள்ளிடம் ஆற்றில் நீரை மடைமாற்றி விடுவதற்காக கட்டப்பட்டது முக்கொம்பு அணை.  1836-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை . 630 மீட்டர் நீளம் கொண்டது.  இந்த அணையில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன. அணையின் மேல் உள்ள பாலத்தை குணசீலம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் திருச்சிக்கு வருவதற்கும், கரூர் சாலையை அடைவதற்கும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில்   மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 19-ந்தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக வந்த உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்துவிடப்பட்டது.

இதன் காரணமாக முக்கொம்பு வழியாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.   முக்கொம்பு மேலணையில் இருந்து கடந்த 18-ந்தேதி காவிரியில் அதிகபட்சமாக வினாடிக்கு 67 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 1 லட்சத்து 67 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக 182 ஆண்டு பழமையான கொள்ளிடம் மேலணையின் மதகுகள் பலவீனமடைந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் 6 முதல் 13 வரையிலான 8 மதகுகள் திடீரென இடிந்துவிழுந்தன. இதனால் அணைக்கட்டின் மேல் பகுதி பாலமும் அப்படியே தண்ணீருக்குள் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன. . நேற்று காலை 14-ம் எண் மதகும் இடிந்துவிழுந்தது. இதனால் அணையில் இடிந்த மதகுகளின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தன.

திருச்சி மாவட்ட ஆட்சியர்  ராஜாமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை டிஐ.ஜி, ஐஜி, தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடைந்த மதகுகளை பார்வையிட்டனர்.

தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகளை ஆய்வு செய்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “உடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான்கு தினங்களுக்குள்  சீரமைக்கும் பணி நிறைவடையும்” என்றார்.

மேலும், “மனித உடலுக்கு ஏற்படும் தீடீர் காய்ச்சல் வருவது போல கொள்ளிடம் அணை உடைந்தது” என்றார்.

அணை உடைந்ததற்கு  காய்ச்சலை உதாரணம்காட்டி பேசிய முதல்வரின் பேச்சை சமூகவலைதளங்களில் பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.

அவர்களில் சிலரது பதிவுகள்:

கருப்பு கருணா

மனித உடலுக்கு திடீர் காய்ச்சல் வருவதுபோல முக்கொம்புஅணை திடீரென உடைந்துள்ளது – எடப்பாடி பழனிச்சாமி

ஹலோ தோழர் பினராயி விஜயன்…இங்க பாருங்க எங்க முதல்வர் எவ்ளோ அறிவா விஞ்ஞானியாட்டம் பேசுறாரு. நீங்களும் இருக்கீங்களே…இயற்கை..பேரிடர்..அது இதுன்னிக்கிட்டு..வேட்டிய மடிச்சிக்கட்டிக்கிட்டு ரோட்டுல நிக்கிறீங்களே..போங்க தோழர்!

Ramalingam Arumugam

மனித உடலுக்கு திடீர் காய்ச்சல் வருவதுபோல முக்கொம்புஅணை திடீரென உடைந்துள்ளது. #எடப்பாடி
.
பராமரிப்புக்கென்று கோடி கணக்குல நிதி ஒதுக்கீடு செய்யுறிங்க அப்புறம் எப்படி காய்ச்சல் வருது.

Neela Rajamani

மனித உடலுக்கு திடீர் காய்ச்சல் வருவதுபோல முக்கொம்புஅணை திடீரென உடைந்துள்ளது – எடப்பாடி பழனிச்சாமி

#அப்பிடினா செல்லூர் ராஜுட்ட சொல்லி மேட்டூர் டேம்ல ஒரு டேங்கர் லாரி நெறைய நிலவேம்பு கசாயம் கொட்டிட்டு வர சொல்லு வெளங்கிரும்…