சென்னை:

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று, பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்திருந்த நிலையில், பஞ்சமி நிலம் விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில்,  முரசொலி நிலம் குறித்து வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதி பதில்!  என்று  திமுக தலைவர் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

கடந்த மாதம் வெளியான தனுஷின் அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின்,   பஞ்சமி நிலத்தை மீட்க தனுஷ் மற்றும் அவரது குடும்பம் எதிர்கொள்ளும் துயரங்களை குறித்து படம் விவரித்து உள்ளது என்று கூறி,  `அசுரன் படம் மட்டுமல்ல பாடம்’ என பாராட்டியிருந்தார்.

இதற்கு  பாமக தரப்பில் இருந்து, அதன் தலைவர் ராமதாஸ், அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!’ என டிவிட் போட்டு பிரச்சினைக்கு பிள்ளையாசூழி போட்டார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும், ஆளும் கட்சியும் முரசொலி நிலம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதைத்தொடர்ந்து திமுக தரப்பில் இருந்து முரசொலி அலுவலகத்திற்கான பட்டா வெளியிடப்பட்டது. இருந்தாலும், இந்த விவகாரம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், திமுக தலைவர் முரசொலி நிலம் குறித்து வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதி பதில்! என்று கூறி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளப் பெருமக்கள், ஜனநாயக விரோத சக்திகளை வீழ்த்திடும் நோக்கில்; தமிழர் நிலத்தில், மத அரசியலுக்கும், அடிமைத்தனத்திற்கும், பணநாயகத்திற்கும் சிறிதும் இடமில்லை என்பதனை, தி.மு.க. கூட்டணியை முழுமையாக ஆதரிப்பதின் மூலம் உலகத்திற்கு அழுத்தம் திருத்தமாய் உறுதியாய் உணர்த்தினார்கள்.

ஜனநாயகத்தில் தோல்வியடைந்தோர், மக்கள் ஏன் தங்களைப் புறக்கணித்தார்கள் என்றாய்ந்து, மனம் திருந்தி, மக்கள் பணியாற்றி, ஆதரவைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆனால், வெற்றி பெற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும், அடிப்படையில்லாப் பழிச்சொல்லுக்கு ஆளாக்கி, அவதூறுகளைப் பரப்புவதே அவர்தம் ஜனநாயகக் கடமை என்று நினைக்கின்றனர்.

அம்முறையிலேதான், அரசு அதிகாரங்களை முறைகேடாகச் செலுத்தி, மக்களிடையே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திடவேண்டும் என்று ஆலாய்ப் பறக்கின்றனர்.

அவ்வழியில் முத்தமிழ் அறிஞர், கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளையாம் முரசொலியின் மீது தொடர்ச்சியான அவதூறு; பஞ்சமி நிலத்தினை வாங்கினோமென்று!

முதலில், மரியாதைக்குரிய மருத்துவர் இராமதாசு அவர்கள், 17/10/2019 அன்று, ஒர் அறிக்கையினை வெளியிட்டார்கள். முரசொலி நிலம் பஞ்சமி நிலமென்றும் குறிப்பிட்டார்கள். அன்றே, அது பச்சைப் பொய்யென்று, பட்டா நகலின் ஆதாரத்துடன் மறுப்பு அறிக்கை தந்தோம். அவர் சொன்னதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்றும்; அப்படி நிரூபிக்கத் தவறினால், அவரும், அவரது மகன் மருத்துவர் அன்புமணி ராமதாசு அவர்களும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அறைகூவல் விடுத்தோம். அதன் பின் அங்கிருந்து பதிலில்லை.

மீண்டும் 19/10/2019-ல் மூலப் பத்திரத்தினைக் காட்டிடவில்லையென்று ஒர் அறிக்கை தந்தார். பொதுவெளியிலும் சரி, நீதிமன்றத்திலும்; குற்றம் சுமத்தியவர்தானே நிரூபித்திட வேண்டும்!

முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம்.

21/10/2019 அன்று பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இதுகுறித்துப் புகார் அளித்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக தலைமைச் செயலாளருக்கு பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் புகாரின் அடிப்படையில் 22/10/2019 அன்றே நோட்டீஸ் அனுப்புகிறது. இதனிடையே, மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், 24/10/2019 அன்று, பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்; அதன் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று பேட்டியளித்தார்.

04/11/2019 அன்று, மீண்டும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு, 19/11/2019 அன்று ஆஜராக உத்தரவிட்டிருப்பதாய் செய்திகள் மூலம் அறிந்தேன்; அரசு நிர்வாகத்தில்தான் என்னே ஒரு வேகம்!

2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்த போதும், அண்மையில் சிறுவன் சுஜித் உயிருக்குப் போராடிய போதும், இன்னும் பல்வேறு நிகழ்வுகளிலும், பொது நலன் கருதி, காட்டியிருக்க வேண்டிய வேகம் அது.

அது சரி, அதற்காகவா அவர்கள் ஆட்சியிலிருக்கிறார்கள்?

முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது, தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சுமாகும். அதன் மீது, கேவலம், தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல; கழகத்தின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.

“முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்!” என, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளுக்கு உறுதியளிக்கிறேன்.

இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன்!

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.