குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா?: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி

சென்னையில் காதுகேளாத – வாய்பேசமுடியாத சிறுமியை கடந்த ஏழு மாதங்களாக 17 பேர் பலாத்காரம் செய்துவந்த விவகாரம் வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், “இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் செக்யூரிட்டி அமைப்பைச் சேர்ந்தவர்கள். மக்களுக்கு காவல்துறை முழுமையான பாதுகாப்பு அளித்தால் தனியார் செக்யூரிட்டிகளை நாடவேண்டியதில்லையே..” என்கிற ஆதங்கக்குரலும் பரவலாக ஒலிக்கிறது.

இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கண்ணப்பனிடம் கருத்து கேட்டோம்.

அவர் நம்மிடம் பேசியதில் இருந்து..:

“சமுதாயத்தில் குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில் காவல்துறைக்கு மட்டுமே அந்த பொறுப்பு என்று பொதுமக்கள் ஒதுங்கியிருப்பது  சரியல்ல.

இன்றைய சமுதாய மாற்றத்தின் அடிப்படையில் பார்த்தால்  ஒவ்வொரு தனி மனிதனும், குடும்பமும், நிறுவனமும் தங்களைத்தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது.

நோய்களைப் போக்க மருத்துவர் இருக்கிறார் என்று நாம் அசட்டையாக இருந்துவிடுவதில்லை. நோய் நம்மை நெருங்காத அளவுக்கு உணவுப்பழக்கவழக்கங்களை மேற்கொள்கிறோம். நடைப்பயிற்சி, யோகா என்று செய்து உடலை பாதுகாக்கிறோம். நோய் வந்த பிறகும் உடல் நலனில் அக்கறை கொண்டு சிறப்பு கவனம் எடுத்துக்கொள்கிறோம்.

மருத்துவரைப் பொறுத்தவரை மருந்து மற்றும் ஆலோசனைகளைத் தருவார். மற்றபடி நம் உடல்.. நம் ஆரோக்கியத்துக்கு நாமே பொறுப்பு என்கிற எண்ணம் இருக்கிறது. அதே போல பாதுகாப்பு விசயங்களிலும் நமக்கு பொறுப்பு உண்டு என்ற எண்ணம் நமக்கு வேண்டும்.

ஆம்.. இந்த சமுதாயத்தையும் பொதுமக்களாகிய நாம்தான் பாதுகாக்க வேண்டும். நமக்கு இதில்  முக்கிய பங்கு இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும்.

இன்றைய கல்வி, மனிதனை சுயநலத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.   அடுத்தவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற மனோபாவத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொது நலத்தை போதிக்கும் கல்வி அவசியம். அப்போதுதான் மக்களிடையே சுமுகமான புரிதல் ஏற்படும். பரஸ்பரம் ஒருவருடன் ஒருவர் இயல்பாக பழகுவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்.

ஆனால் இங்கே  நாம் பக்கத்து வீட்டுக்காரரையே  அறியாத சமூகமாக இருக்கிறோம். முகநூல் போன்ற சமூகவலைதளங்களில் உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நேரடி அறிமுகமில்லாதவருக்கு மூன்று வேளையும் வணக்கம் வைக்கிறோம். வாழ்த்து சொல்கிறோம். ஆனால் அக்கம் பக்கத்தினர் என்றால் முகத்தைத் திருப்பிக்கொள்கிறோம். இந்த நிலை மாறவேண்டும்.

காவல்துறை என்பது ஆசிரியர் பணி போன்றது. தவறு செய்யும் ஒரு மாணவனுக்கு ஆசிரியர் தரும் தண்டனை, பிற மாணவர்களைத் தவறு செய்யாமலிருக்க வைக்கிறது. அது போல ஒரு குற்றவாளிக்கு அளிக்கப்படும் தண்டனையானது மற்றவரை குற்றம் செய்யக்கூடாது என்கிற மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்.

காவல்துறையினரின் எண்ணிக்கை குறைவாக இருப்பது என்பது உண்மைதான்.காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப்படுத்துவதோடு மட்டுமின்றி,  காவல்துறையின் தினசரி செயல்பாடுகள் காலத்திற்கு ஏற்ப முறைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

குற்றவாளியைப் பிடிப்பதோடு காவல்துறையின் பணி முடிந்துவிடுகிறது. அதன் பிறகு நீதிமன்றத்தின் பொறுப்பில் வழக்குகள் சென்றுவிடுகின்றன. அங்கு நீண்டகாலத்துக்குப் பிறகு குற்றவாளிக்கு தண்டனையோ அல்லது விடுதலையோ கிடைக்கிறது.

கண்ணப்பன் ஐ.பி.எஸ்.

நீண்ட காலத்துப்பிறகு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் செயலானது குற்றம் செய்வோரை மறைமுகமாகத் தூண்டும் செயலாக இருக்கிறது. இதற்காக நீதித்துறையை நான் குறை சொல்லவில்லை. இந்த தாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையே குறிப்பிடுகிறேன்.

மிக முக்கிய விசயம் குற்றவாளிகள் வேற்று கிரகத்தில் இருந்து இறக்குமதி ஆவதில்லை.  நம் குடும்பத்தைச் சேர்ந்த சிலரே குற்றம் செயலில் ஈடுபடுகிறார்கள்.

பெற்றோர் குழந்தைகளிடம் நட்புடன் பழக வேண்டும். மனம்விட்டுப் பேச வேண்டும். ஆனால், “அதுக்கெல்லாம் எங்கே நேரம்” என்று ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி ஓடி ஓடி உழைப்பது பிள்ளைகளுக்காகத்தானே.. அப்படிச் சேர்த்த பணத்தை பிள்ளைகள் நிம்மதியான மனநிலையில் நல்லவராக வளர்ந்து அனுபவிக்க வேண்டாமா என்ற பெரும்பாலான பெற்றோர் யோசிப்பதில்லை.

ஆக.. பொது சிந்தனை மற்றும் நல்லொழுக்கத்தையம் போதிக்கும் கல்வி, சக மனிதர்களுடன் நட்புடன் பழகும் தன்மை, தனக்கு பிரச்சினை என்றவுடன் சட்டம் குறித்துப் பேசாமல் எப்போதுமே சட்டதிட்டங்களை மதிக்கும் பாங்கு ஆகியவையே குற்றங்களைத் தடுக்க அல்லது குறைக்க உதவும்” என்றார் கண்ணப்பன் ஐ.பி.எஸ்.