ஜனாதிபதி என்ன உங்கள் சட்டைப்பையில் இருப்பவரா? பாஜகவை வெளுக்கும் சிவசேனா

மும்பை: குடியரசு தலைவர் என்ன பாஜகவின் சட்டசபையில் இருக்கிறாரா? என்று சிவசேனா கடுமையாக விமர்சித்து இருக்கிறது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்துவிட்டன. தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.

ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள போதிலும், அரியணையில் ஏற முடியாமல் பாஜக தடுமாறி வருகிறது. காரணம், சிவசேனாவின் பிடிவாதம் தான்.

சிவசேனாவின் நிலைப்பாட்டால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் இரு கட்சிகளுக்கும் முதலமைச்சர் பதவி, அமைச்சரவையில் சமபங்கு ஆகியவை சிவசேனாவின் கோரிக்கை.

ஆனால், பாஜக அதை நிராகரித்து இருக்கிறது. அதனை தொடர்ந்து, வரும் 7ம் தேதிக்குள் ஆட்சி அமையாவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமையும் என்று பாஜக தலைவர் சுதிர் முங்காண்டிவர் கூறியிருக்கிறார்.

சஞ்சய் ராவுத்

இது சிவசேனா தரப்பை கடுமையாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பாஜக கருத்து குறித்து, சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் கூறியிருப்பதாவது:

இந்திய அரசியலமைப்பின் தலைவர் குடியரசுத் தலைவர். அவர் என்ன பாஜகவின் சட்டை பையில் இருப்பவரா? இதுபோன்று பாஜக பேசுவது மக்கள் அளித்துள்ள முடிவை கொச்சைப்படுத்துவது போன்றது.

கடைசி நிமிடம் வரை பாஜகவுக்கு அளித்த வாக்குறுதிகளை சிவசேனா நிச்சயம் நிறைவேற்றும். ஆனால் அதற்காக காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார்.

மகாராஷ்டிராவில், தற்போதுள்ள அமைச்சரவையின் பதவி காலம் வரும் 8ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.