புதுச்சேரி:

புதுச்சேரியை மத்தியஅரசு,  மாநிலமாகவோ, யூனியன் பிரதேசமாகவோ கருதவில்லை என்றால், திருநங்கை மாநிலமாக அறிவித்து விடுங்கள் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக கூறினார்.

புதுச்சேரியில் நடைபெற்ற  `வளர்ந்து வரும் இந்திய நிதி கூட்டாட்சித் தத்துவத்தின் சவால்கள்’ என்ற தலைப்பி லான கருத்தரங்கில்  கலந்துகொண்டு பேசிய முதல்வர் நாராயணசாமி, `சமீபத்தில் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகியவை 15-வது நிதிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால்,  யூனியன் பிரதேசங்களான புதுச்சேரியும் டெல்லியும் நிதிக்குழுவில் சேர்க்கப்படவில்லை.

புதுச்சேரி மாநிலத்தை நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் எனப் பலரையும் சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால், அதை செயல்படுத்தாமல் புதிதாக பிரித்த மாநிலத்தை மட்டும் சேர்த்துள்ளனர். முன்பெல்லாம் புதுச்சேரிக்கு மத்திய அரசு 70 சதவிகித நிதியைக் கொடுத்துவந்தது. ஆனால், தற்போது 30 சதவிகிதம்தான் என மத்திய அரசு தெரிவித்துவிட்டது. அதில் கையில் கிடைப்பதோ வெறும் 26 சதவிகித நிதிதான்.

அதேநேரத்தில் மற்ற மாநிலங்களுக்கு 42 சதவிகிதம் மத்திய அரசின் நிதி கிடைக்கிறது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இப்படி பல தடைகளுக்கு இடையிலும் மாநிலத்தின் வளர்ச்சி 11.4 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது.

மத்தியில் மாநிலங்களுக்கான நிதிக்குழு, யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழு என இரு நிதிக்குழுக்கள் இருக்கின்றன. ஆனால், இவை இரண்டிலுமே புதுச்சேரி மாநிலம் இல்லை. ஜி.எஸ்.டி, சுங்கம் உள்ளிட்ட பல்வேறு வருவாயை மத்திய அரசு பெறும்போது மட்டும் புதுச்சேரியை ஒரு மாநிலமாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால், மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டின்போது யூனியன் பிரதேசமாகப் பார்க்கிறது.

இதற்கு எங்களை திருநங்கை என அறிவித்துவிடுங்கள். எங்களிடம் வளம் உள்ளது. ஆனால், நிதியில்லாமல் பல்வேறு சிக்கல்களில் தவிக்கிறோம்” என்றார்.

புதுச்சேரி முதல்வரின் திருநங்கை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கருத்தரங்கில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் சி.பி.எம் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.