அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்கிறாரா ரஜினி?:  கட்சிக்குள் ஆரம்பித்த மோதல்!

டிகர் ரஜினிகாந்த் அதிமுகவின் தலைவராவதற்கு வாய்ப்புள்ளதாக எழுந்துள்ள யூகம், அ.தி.மு.க.வுக்குள் வெளிப்படையாக மோதலை ஏற்படுத்தி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றியதோடு சரி. மற்றபடி இன்னமும் கட்சி பெயரையோ, கொடியையோ அறிவிக்கவில்லை.  சில முக்கிய பிரச்சினைகளில் கருத்து கூறினாலும் வேறு பல முக்கிய பிரச்சினைகளில் அமைதி காக்கிறார்.

ஆகவே அவர் உண்மையாகவே கட்சி துவங்குவாரா.. அல்லது ரசிகர்களின் நிர்ப்பந்தத்தால் அப்படி அறிவித்துவிட்டாரா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.

 

ரஜினி

இந்த நிலையில், “ரஜினி அமைதி காப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. தற்போது அ.தி.மு.க. என்பது பா.ஜ.வின் கைப்பிள்ளையாக இருக்கிறது. அங்கிருந்து வரும் உத்தரவுகளுக்கு ஏற்ப அ.தி.மு.க. பிரமுகர்கள் ஆடுகிறார்கள்.

இந்த நிலையில் பா.ஜ.க. ஒரு திட்டம் தீட்டியுள்ளது. அதாவது ரஜினியிடம் தனிக்கட்சி துவங்கவேண்டாம் என்று கூறியுள்ள பா.ஜ.க. தலைமை, அவரை அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்க வைப்பதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ரஜினிக்கு எந்தவித உழைப்பும் இல்லாமல், ஒட்டுமொத்தமாக ஒரு (ஆளும்) கட்சியே வந்துவிடும். அதே நேரம் மக்கள் ஆதரவு பெற்ற தலைமை இல்லாமல் தடுமாறும் அ.தி.மு.க.வுக்கும் ஒரு தலைவர் கிடைத்துவிடுவார். ஆக அக்கட்சியின் செல்வாக்கு உயரும். அப்போது பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து  தேர்தலை சந்திக்கும்” என்று ஒரு யூகச் செய்தி உலவுகிறது.

“இதையெல்லாம் மனதில் வைத்தே ஆரம்பத்தில் சிஸ்டம் சரியில்லை என்று பேசிய ரஜினி, பிறகு அதிமுகவுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, எட்டுவழிச்சாலை ஆகியவை குறித்த அவரது பேச்சு இதற்கு உதாரணம்.

மேலும், சென்னையில் நடந்த விழா ஒன்றில் ரஜினி எம்ஜிஆர் குறித்து பேசினார். எம்ஜிஆர் ஆட்சி போல் ஒரு ஆட்சியை தர வேண்டும் என்று முயற்சிப்பதாக கூறினார்” என்றும் கூறுகிறார்கள்.

மாபா பாண்டியராஜன்

அதோடு, “இந்தத் திட்டத்துக்கு ஆளும் தரப்பில் முக்கிய நபர்கள் பலர் ஒப்புக்கொண்டனர். அதன் வெளிப்பாடுதான், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், ரஜினி அ.தி.மு.க.வுக்கே வரலாம்.. தலைமைப் பொறுப்பேற்கலாம்.. எதுவும் நடக்கலாம்” என்று பேசினார்” என்கிறார்கள்.

அதே நேரம் மாபா பாண்டியராஜன் பேச்சுக்கு அ.தி.மு.க.வில் எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. முக்கியமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சூட்டோடு சூடாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “எவராக இருந்தாலும் வந்தவுடன் தலைமைப் பொறுப்பேற்க முடியாது” என்றார்.

மேலும்,  “எங்கள் கொள்கையை ஏற்பவர்கள் யார் வேண்டுமானாலும் கட்சிக்கு வரலாம். முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசித்து அதுகுறித்து முடிவெடுப்பார்கள்.

 

செல்லூர் ராஜூ

ஆனால் இயக்கத்தில் இருப்பவர்கள்தான் தலைமைப்பொறுப்பு ஏற்பார்கள். வெளியிலிருந்து வந்தவுடன் தலைமைப்பொறுப்பேற்க வேண்டும் என்றால், அது நடக்காது. முதலில் தொண்டராக வரவேண்டும். இங்கே உழைக்க வேண்டும்” என்றவர், வெளிப்படையாகவே, “அது கமலாக இருந்தாலும் ரஜினியாக இருந்தாலும் இதேதான்” என்று போட்டு உடைத்திருக்கிறார்.

இந்த நிலையில் செல்லூர் ராஜூவின் பேச்சும் உள்நோக்கம் கொண்டது என்று பேசப்படுகிறது.

இப்படிச் சொல்பவர்கள், “அ.தி.மு.க.வுக்கு ரஜினி தலைமையேற்றால் ஏற்கத்தயார் என்று துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ். ஏற்கெனவே பாஜகவிடம் ஒப்புக்கொண்டார். முதல்வர் எடப்பாடிதான் எதிர்க்கிறார்.

ஆனால் செல்லூர் ராஜூ பேசும்போது, பிரபலமானவர்கள் கட்சிக்குள் வந்தால் அது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று வேண்டுமென்றே ஓ.பி.எஸ்ஸை கோர்த்துவிட்டிருக்கிறார்” என்கிறார்கள்.

ஆக ரஜினி விவகாரம், அ.தி.மு.க.வுள் புயலைக் கிளப்பியிருக்கிறது என்பது உண்மை.

Leave a Reply

Your email address will not be published.