கேள்வி: ரவுண்ட்ஸ்பாய் பதில்: ராமண்ணா

ரவுண்ட்ஸ்பாய் – ரஜினி – ராமண்ணா

ரவுண்ட்ஸ்பாய்: இந்தியாவிலேயே மிகச் சிறந்த அரசியல்வாதி யார்?

ராமண்ணா: “சிறந்த” என்பதற்கு தாங்கள் என்ன அர்த்தம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் பொதுவாக உள்ள அர்த்தப்படி பார்த்தால்… ரஜினிதான் மிகச் சிறந்த அரசியல்வாதி. கிட்டதட்ட 30 வருடங்களாக, அரசியல் பூச்சாண்டி காட்டி இன்னமும் அதை உயிர்ப்போடு வைத்திருக்கிறாரே..!

ரவுண்ட்ஸ்பாய்: ரஜினி பேச்சில் இருந்து தாங்கள் புரிந்துகொண்டது?

ராமண்ணா ”அரசியல் என்பது முதலைகள் நிரம்பிய ஆறு.. அதில் காலை வைத்த பிறகு, விசயம் தெரிந்தவுடன் பின்னுக்கு இழுத்துக்கொள்வது தவறல்ல.. முரட்டு தைரியம் கூடாது” என்று பேசியதன் மூலம், தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்பதைச் சொல்லியிருக்கிறார்.

“பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுடன் ரசிகர்கள் சிலர் தொடர்புவைத்துக்கொண்டு பணம் பார்த்துவிட்டார்கள். நான் அரசியலுக்கு வந்தால் இவர்களை கிட்டே சேர்க்க மாட்டேன்” என்றதன் மூலம் “அரசியலுக்கு வருவாரோ” என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

மொத்த்தில் எனக்குப் புரிந்தது இரண்டு விசயங்கள்தான்:

1.   வரும் 20ம் தேதி ரஜினியின் புதுப்படம் துவங்க இருக்கிறது.

2.   விரைவில் அவரது 2.0 படம் வர இருக்கிறது.

ரவுண்ட்ஸ்பாய்: அரசியலில் “ஊழலற்ற தன்மை” குறித்து ரஜினி பேசியிருக்கிறாரே..

ராமண்ணா: பேசியிருக்கிறார்தான். ஆனால் அப்படிப்பேச அவருக்கு தகுதி இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

இதுவரை ஒரு ஊழல் குறித்தும் எதிர்த்து குரல் கொடுத்தவர் இல்லை இவர். தவிர, யார் மீதெல்லாம் கடுமையான ஊழல் புகார்கள் இருக்கிறதோ அவர்களுடன் இன்றளவும் எந்தவித முரணும் இல்லாமல் கூடிக்குலாவிக்கொண்டுதான் இருக்கிறார்.

இன்னொரு விசயம்…

இவரது படங்கள் வெளியாகும்போதெல்லாம் டிக்கெட் விலை பல மடங்கு விலை உயர்த்தி விற்கப்படுகிறது. இதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய்.  இப்படி சட்டத்துக்குப் புறம்பாக – மக்களையும் ரசிகர்களையும் ஏமாற்றி –  கொள்ளையடிக்கப்படும் கோடிகளில் நின்றுகொண்டுதான் “ஊழல், நேர்மை” என்றெல்லாம் பேசுகிறார் ரஜினி.

தனக்கு வாக்களித்த மக்களை எப்படி அரசியல்வாதிகள் ஏமாற்றி லஞ்ச ஊழலில் திளைக்கிறார்களோ.. அதற்கு சற்றும் குறையாமல் தன் படத்தை விரும்பிப் பார்க்கவரும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களையும் ஏமாற்றுகிறார் ரஜினி.

இவர் நடத்தும் பள்ளியில் நடக்கும் ஊழல் விவகாரங்கள் குறித்தும் செய்திள் வந்தனவே.

இவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்ல தகுதியிழந்தவர்கள்.