ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் நேற்று வெளியான தர்பார் படத்தில் காசு இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வசனத்தை தர்பார் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், அவ்வாறு நீக்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட அந்த வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரியவந்ததால், நீக்கப்படுகிறது. தனிப்பட்ட எந்தவொரு நபரையும் குறிப்பதல்ல. பொதுவாக எழுதப்பட்ட வசனம் தான் அது எனவும் லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிகழ்வு பல விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. இதுகுறித்து பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் எழுதியிருப்பதாவது..

ரஜினியை புரிந்து கொள்ள இந்த ஒரு சந்தர்ப்பம் போதுமானது.!

ஒரு கைதி தனது பணபலத்தால் சிறை அதிகாரிகளை விலை பேசி,ஷாப்பிங் மட்டுமே செல்ல முடியும் என்று இது வரை நாம் நினைத்திருந்தோம்! ஆனால்,அவரால் ஒரு சூப்பர் ஸ்டாரைக் கூட சிறைக்குள்ளிருந்து அச்சத்திற்கு உள்ளாக்கமுடியும் என்பது தெரிய வருகிறது.

ஒரு நேர்மையான கலைஞன்,சமுகப் பொறுப்புள்ள படைப்பாளி ஒரு போதும் சமுக விரோத சக்திகளிடம் சமரசமாக மாட்டான்!

எந்தமாதிரி பின்வாங்கியுள்ளார்கள் என்று கவனிக்க வேண்டும்.”காசு கொடுத்தா ஷாப்பிங் கூட போகலாம்” என்ற ஒரு சாதாரண நிதர்சனத்தை தான் – அதுவும் அனைவரும் அறிந்த உண்மையைத் தான் – சொல்லியுள்ளனரேயன்றி,வேறு எந்த புரட்சிகரமான வசனத்தையோ,புடலங்காயையோ சொல்லிவிடவில்லை!

அதற்கே ஒரு அந்தர்பல்டி என்றால் எப்படி?

”எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ,யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்படவில்லை.இது,சிலரது மனதை புண்படுத்துவதாகத் தெரிய வந்ததால்,படத்திலிருந்து நீக்கப்படுவதாகத் தெரிவித்துக் கொள்கிறோம்!”

அதாவது, சசிகலா மனதை புண்படுத்தியதால் இந்த வசனத்தை எடுத்துவிடுகிறோம் என்று நேர்மையாக ஒத்துக் கொள்ளக் கூட தயக்கம்…!

நாளை, ரஜினி ஆட்சிக்கு வந்தால் ஒரு ஊழல் அரசியல்வாதியை அல்லது பொதுப் பணத்தை திருடியவனை கைது செய்தால் அவர்களது மனம் புண்பட்டுவிடக் கூடும் ,ஆகவே கைது செய்யாதேர்கள்.” என்று காவல்துறைக்கு உத்தரவிடுவாரோ.என்னவோ!

நிஜத்தில் அல்ல, சினிமாவில் கூட ஒரு நிதர்சன உண்மையை சொல்வதில் இவ்வளவு கோழைத்தனம் இருக்குமென்றால்.,இப்படியான ஒருவரை முகமுடியாக்கிக் கொண்டு, பின்னிருந்து அவரை இயக்கி ஆளலாம் என்ற சக்திகளின் சரியான சாய்ஸ்தான் ரஜினிகாந்த்!

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.