Random image

ரஜினி மன்றத்தில் இருந்து ராஜூ மகாலிங்கம் நீக்கமா?: தலைமை விளக்கம்

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து மோசடி குற்றச்சாட்டு காரணமாக, செய்ததாக ராஜூ மகாலிங்கம் நீக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் பரவிய தகவலை ரஜினி மக்கள் மன்ற தலைமையகம் மறுத்துள்ளது.

 

கடந்த (2017ம்) ஆண்டு, தனது அரசியல் பிரவேசத்தை ரஜினி அறிவித்தார். ரஜினி ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. லைகா நிறுவனத்தில் பொறுப்பில் இருந்த ராஜூ மகாலிங்கம் என்பவருக்கு மக்கள் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர்   பதவி கொடுத்தார் ரஜினி.

ரஜினியின் குரலாக தலைமை மன்ற நிர்வாகி சுதாகர் இருக்கும்போது,  மன்றத்துக்கு தொடர்பே இல்லாத ராஜூ மகாலிங்கத்தை பொறுப்பில் அமர்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் பலவித குளறுபடிகள் நடப்பதாகவும், பணம் விளையாடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில் சமீபத்தில், மக்கள் மன்ற  தலைமையகத்தை மூடிவிட்டு பொறுப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்று ரஜினி உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இரு நாட்கள் மூடப்பட்டுக்கிடந்த தலைமையகம் பிறகு திறக்கப்பட்டதாகவும், ஆனாலும் மாநில பொறுப்பாளரக்கள் தலைமையகத்துக்கு வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், ரஜினியால் ஏற்கெனவே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மன்ற பொறுப்பாளர் சத்தியநாராயணா மீண்டும் பொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் பொதுச்செயலாளர் ராஜூ மகாலிங்கத்தை பொறுப்பில் இருந்து ரஜினி நீக்கிவிட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், அவரை மன்றத்தின் உறுப்பினர்கள் யாரும் தொடர்புகொள்ளக் கூடாது என எச்சரித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ராஜூ மகாலிங்கம் மன்றத்தின் நிதியை சுருட்டியதற்காக ரஜினி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் எனவும் இனிமேல் தன்னைப் பார்க்க அவரை அனுமதிக்கப்போவதில்லை என்று முடிவுசெய்துவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ரஜினி மன்ற பொறுப்பாளர் சுதாகர், “ராஜூமகாலிங்கம் பொறுப்பில்தான் இருக்கிறார். அவர் நீக்கப்பட்டதாக பரவிய தகவல் உண்மையானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.