டெல்லி:
கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலம் உண்மையிலேயே மனிதர்களால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா என்பதை உறுதி செய்ய இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை மற்றும் வரலாற்றாசிரியர்கள் ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளனர்.

இதற்காக 15 முதல் 20 ஆராய்ச்சியாளர்களை தேர்வு செய்து 2 வாரங்கள் பயிற்சி அளிக்க இந்திய வரலாற்று ஆய்வு குழு (ஐசிஹெச்ஆர்) முடிவு செய்துள்ளது. கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளகள், பேராசிரியர் மூலம் ஆழ்கடல் ஆராய்ச்சி குறித்த பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எந்த அமைச்சகமும் தலையிடவில்லை. இந்த ஆராய்ச்சிக்கான மானியத்தை மத்திய அரசிடம் கேட்க ஐசிஹெச்ஆர் முடிவு செய்துள்ளது. இது போன்றதொரு ஆராய்ச்சி ஏற்கனவே குஜராத் கடற்கரையான துவாரகாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துணை கண்ட கலாச்சார ஆராய்ச்சிகளின் ஒரு கட்டமாக இந்த ஆய்வையும மேற்கொள்ள ஐசிஹெச்ஆர் முடிவு செய்துள்ளது.
ஐசிஹெச்ஆர் தலைவர் சுதர்சன் ராவ் கூறுகையில், ‘‘ சர்ச்சையை ஏற்படுத்திய ராமர் சேது பாலம் தொடர்பாக தொலை உணர்வு தகவல்கள் மற்றும் இதர அறிக்கைகள் கைவசம் உள்ளது. தற்போது பொருள் ஆதாரம் மட்டுமே தேவைப்படுகிறது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஐசிஹெச்ஆர் உறுப்பினர் செயலர் ஆனந்த் சங்கர் சிங், இந்திய தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் அலோக் திரிபாதி, அஸ்ஸாம் மத்திய பல்கலைக்கழக தொல்பொருள் துறை பேராசிரியர் சில்சார் ஆகியோர் இந்த பயிற்சி திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்களாக இருப்பார்கள்.

ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் இளநிலை ஆசிரியர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தொல்பொருள் துறையில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். கடல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவும் இதில இடம்பெறவுள்ளது. கிரேக்க புராணங்களில் உள்ள ஹெலன் ஆப் டிராய் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமர் சேது பாலம் தொடர்பான ஆதாரங்களை சேகரித்துவிட்டு பின்னர் பேசுவோம்’’ என்றார்.

தமிழகத்தின் பாம்பன் தீவு மற்றும் இலங்கையின் மன்னார் தீவுக்கு இடையிலா இந்த பகுதி சுண்ணாம்பு திரள்களின் கோர்வையாக இருக்கலாம். எனினும் ராமர் சேது பாலத்தை சுற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளது. இது மனிதர்களால் செய்யப்பட்ட அமைப்பு என்று 2002ம் ஆண்டு நாசா செயற்கைகோள் புகைப்படங்கள் தெரிவித்தன. அதே சமயம் 30 கி.மீ. தொலைவுக்கு ஏற்பட்டுள்ள மண் குவியல் கோர்வை என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை உணர்வு மைய பேராசிரியர் ராமசாமி தலைமையிலான குழு மேற்கொண்ட ஆராய்ச்சியில் ராமநாதபுரம் மற்றும் பாம்பன் இடையிலான நீண்ட கடற்கரையில் கரியமில படலங்கள் இருந்துள்ளது. இது ராமாயன காலத்தோடு ஒத்துப்போகிறது என்று தெரிவித்துள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் பத்ரிநாராயணன் கூறுகையில்,‘‘ இயற்கையான மண் குவியலுக்கு அந்த பகுதியில் வாய்ப்பில்லை. அந்த பகுதி முழுவதும் தளர்வு மண் நிறைந்த பகுதிகளாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அந்த பாலம் ராமரால் கட்டப்பட்டது என்பதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இல்லை என்று மத்திய அரசு கடந்த 2007ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அதே சமயம் அதே ஆண்டு ஜூலை மாதம் ராமர் சேது பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. மத்திய அரசு ஏன் சேது கால்வாய் திட்டத்தை வேறு வழித்தடத்தில் செயல்படுத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.