அங்கெல்லாம் இருக்கிறதா இட ஒதுக்கீடு?: சிறப்புக்கட்டுரை:  அ. குமரேசன்

ரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறநகர் ரயிலில் வந்துகொண்டிருந்தேன். மூன்று பேர் உட்கார்வதற்கான இருக்கையில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தோம். எதிரில் ஒருவர் இருக்கையில் துண்டுவிரித்து சன்னலோரமாக உட்கார்ந்திருந்தார். அடுத்த நிலையத்தில் ஏறிய இரண்டு பேர் அவரிடம், அந்த இடத்தில் அமர்ந்துகொள்ளலாமா என்று கேட்டார்கள். அவர், கடம்பத்தூரில் தனது உறவினர்கள் ஏறுவார்கள் என்றும், அவர்களுக்காகத் துண்டு விரித்திருப்பதாகவும் தெரிவித்தார். இவர்கள், “பரவாயில்லை அதுவரையில் உட்கார்ந்துகொள்கிறோம், கடம்பத்தூர் வந்ததும் எழுந்துகொள்கிறோம்” என்று கூறி, துண்டை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்தனர். கடம்பத்தூர் நிலையம் வந்ததும் அவரது உறவினர்கள் ஏறிக்கொள்ள, இவர்கள் இருவரும் சொன்னது போலவே எழுந்துகொண்டனர்…

அது முன்பதிவு செய்யப்படும் ரயிலோ, பெட்டியோ, இருக்கைகளோ அல்ல. முன்கூட்டியே ஏறிக்கொண்டதால் இனிவரும் நிலையங்களில் ஏறக்கூடியவர்களுக்காக இடத்தைப் பிடித்துவைத்துக்கொள்ளலாம் என பொதுச் சட்டமோ, ரயில்வே விதியோ அனுமதிக்கவில்லை. ஆனாலும் இது போல் அந்தத் தடத்தில் அடிக்கடி நிகழ்வதுண்டு. முன்பதிவற்ற பிற ரயில்களிலும் இப்படி நடக்கும். சில நேரங்களில் பேருந்துகளிலும் நடக்கும். அரிதாகத்தான் சிலர் இப்படி முன்கூட்டியே இடத்தைப் பிடித்துவைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். மற்றவர்கள் நீண்ட தொலைவானாலும் அனுசரித்துக்கொள்கிறார்கள்.

சட்டப்படி அனுமதியில்லாத, நடைமுறைப்படி நியாயமுமில்லாத இப்படிப்பட்ட இடம்பிடிப்பு அத்துமீறல்களை பண்போடு ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட, சமூக நியாயம் சார்ந்த இட ஒதுக்கீட்டு முறையை வன்மத்தோடு எதிர்க்கிறார்கள்! வரலாற்றில் நெடுங்காலமாக ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டும் வந்துள்ள தலித் சமூகங்கள், பழங்குடி சமூகங்கள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தோருக்கு அரசுக் கல்வி வாய்ப்புகளிலும் அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு எதிரான குரல் எப்போதுமே ஒலித்து வந்திருக்கிறது. தலித், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு அரசமைப்பு சாசனத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்த மண்டல் ஆணைய அறிக்கையைச் செயல்படுத்த வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு முடிவு செய்தபோது அதை எதிர்த்து நாடு தழுவிய கலவரமே மூட்டிவிடப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்று வந்தபோது ஐஐடி நிறுவனங்களின் இயக்குநர்கள் கொந்தளித்தார்கள்.

வழக்கும் விவாதமும்

இப்படியான கொந்தளிப்புகள் பல வடிவங்களில் தொடர்கின்றன. தற்போது உச்சநீதிமன்றத்தில் அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்குவதிலும் இட ஒதுக்கீடு என்பதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கும் விசாரணைக்கு வர இருக்கிறது. இதையொட்டிய விவாதங்களும் தொடங்கியுள்ளன.

இடஒதுக்கீட்டால் அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று தொடங்கி, அப்படியே படிப்பில் வேண்டுமானால் இட ஒதுக்கீடு இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் அது முன்பு உச்சநீதிமன்றம் சொன்னபடி 50 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது என்றும், வேலை நியமனங்களில் வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் பதவி உயர்வுகளில் கூடாது என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. “இருந்துவிட்டுப்போகட்டும்” என்று பெருந்தன்மையைக் காட்டுகிறவர்கள் பெரும்பாலும் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டால் உண்மையிலேயே பலன் கிடைத்திருக்கிறதா, அது பற்றிய ஆய்வை அரசு நடத்த வேண்டாமா, தற்காலிக ஏற்பாடான இட ஒதுக்கீடு இன்னும் எத்தனை காலத்திற்குத் தொடர வேண்டும், அதற்கொரு கால வரம்பு வைத்துக்கொள்ள வேண்டாமா, இட ஒதுக்கீட்டால் பலனடைந்து மாவட்ட ஆட்சியர், அரசுச் செயலர் போன்ற பதவிகளுக்கும் பொருளாதார அடிப்படையில் வசதியான வாழ்க்கைக்கும் வந்தவர்களின் பிள்ளைகளும் இச்சலுகையைக் கோருவது முறைதானா… இப்படியான கேள்விகளை அக் கேள்விகளின் நேரடிப் பொருளிலேயே கேட்கிறவர்கள் குறைவுதான். இடஒதுக்கீட்டிற்கு உரிய சமூகங்களிலேயே மேல்தட்டுக்கு வந்தவர்களை (கொதிக்கவைத்த பாலில் மேலே மிதக்கும் பாலாடையைப் போன்றவர்கள் – அதாவது கிரீமி லேயர்கள்) இந்தச் சலுகை நிழலிருந்து ஒதுக்கிவைத்தால் என்ன என்ற துணைக்கேள்வி பரவலாகவே ஒலிக்கிறது.  பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால் என்ன என்பது அந்தத் துணைக்கேள்வியோடு இணைந்த கூடுதல் துணைக்கேள்வி. முற்போக்கான சிந்தனையும், சமத்துவ சமூகம் உருவாவதில் அக்கறையும் உள்ளவர்களிடையே கூ இக்கேள்விகளும் துணைக் கேள்விகளும் வலம் வருகின்றன. ஏன் – இட ஒதுக்கீட்டிற்கு உரிய சமூகங்களைச் சேர்ந்தவர்களிலும் இக்கேள்விகளை எழுப்புகிற சிலர் உண்டு.

முதலில் ஏற்பட வேண்டிய தெளிவு – இட ஒதுக்கீடு ஒரு சலுகையல்ல, அது ஒரு உரிமை. நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களின் சமத்துவ வளர்ச்சியை நிலைநாட்டுவதற்கான ஒரு அறிவியல்பூர்வ ஏற்பாடு. விளையாட்டுக் களத்தில் வட்டவடிவமான ஓட்ட மைதானத்தில் உள்வட்டத் தடத்தில் ஓட வேண்டியவர் பின்னால் நிறுத்தப்படுவார், வெளிவட்டத் தடத்தில் இருப்பவர் முன்னால் நிறுத்தப்படுவார். அது போன்றதே இதுவும்.

அடுத்து ஏற்பட வேண்டிய தெளிவு – இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது அல்ல. சமூக அடிப்படையில்தான் முடிவு செய்யப்பட்டது. எவ்வளவு பணக்காரரானாலும் சமூக அடுக்கில் அவர் பிற்படுத்தப்பட்டவர்தான், அடித்தட்டுக்குத் தள்ளப்பட்டவர்தான். இதிகாசக் கதைப்படியே கூட, சம்புகன் தலை வெட்டப்பட்டது ஒரு ஏழை வேதம் படிப்பதா என்றல்ல, ஒரு சூத்திரன் வேதம் படிப்பதா என்றுதான். ஏகலைவன் கட்டைவிரல் காவுகேட்கப்பட்டது ஒரு ஏழை வித்தை பயில்வதா என்றல்ல, ஒரு பழங்குடி மகன் வித்தை பயில்வதா என்றுதான். நந்தன் தீயில் இறக்கப்பட்டது ஒரு ஏழை கோவிலுக்குள் வருவதா என்றல்ல, ஒரு தாழ்த்தப்பட்டவர் கோவிலுக்குள் வருவதா என்றுதான். இந்தக் கதைகளும் இவை சொல்கிற நீதிகளும் புனிதமாகப் போதிக்கப்படுகிற தேசத்தில் சமூகநீதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு. ஏற்கெனவே ஆலயக் கருவறைக்குள் இன்னார்தான் நுழையலாம், கோவில் தேர் வடத்தை இன்னார்தான் பிடிக்கலாம் என்று இன்னமும் தொடர்கிற சமுதாயத்தில் அதை மாற்றுவதற்குத் தேவைப்படுவது, ஒதுக்கப்பட்டவர்களின் சமூக நிலையை உயர்த்துவதற்கான கல்வி மேன்மையையும் அரசுப் பணி ஆளுமையையும் உறுதிப்படுத்துவதற்கான இட ஒதுக்கீடு. மார்க்சியம் சொல்வது போல், சமூகப் பிரிவினைகளின் அடி நரம்பாக ஓடுவது வர்க்கச் சுரண்டல் சார்ந்த பொருளாதாரம்தான். ஆனால், மார்க்சியம் சொல்கிற இந்தப் பொருளாதார அடி நரம்பு வெறும் ரூபாய் நோட்டுகள் சார்ந்ததல்ல. இந்தியச் சூழலில், மேலிருந்து தன்னை மிதிக்கிற கால்கள் மீதான கோபத்தை விட, கீழே தன் கால்களில் மிதிபடச் சிலர் இருக்கிறார்கள் என்ற மன வக்கிரத்தோடு இணைந்தது இது.

பொருளாதாரக் கோரிக்கை தவறா?

அப்படியானால், பொருளாதாரத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் முன்னேறுவதற்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கை தவறா? தவறே இல்லை. அதைக் கொண்டுவரக்கூடாது என்று, சமூகநீதி ஆதரவாளர்கள் யாரும் சொல்லவில்லை. ஆனால், அந்த ஒதுக்கீடு தனியாகத்தான் செய்யப்பட வேண்டுமேயல்லாமல், ஏற்கெனவே உள்ள சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிலிருந்து அல்ல. ஒரு பாறையில் சிலை வடிக்கிறபோது, கூடுதலாக ஒரு துண்டுக் கல்லை வெட்டியெடுக்க வேண்டுமென்றால், இதுவரை வெட்டப்படாத பாறைப் பகுதியிலிருந்துதான் வெட்டியெடுக்க வேண்டுமேயல்லாமல், ஏற்கெனவே வெட்டப்பட்டு ஒரு வடிவத்திற்கு வந்திருக்கிற பகுதியிலிருந்து அல்ல.

ஆகவே, கல்விச்சாலையிலும் பணித்தலத்திலும் நுழைவதற்கான இட ஒதுக்கீட்டு நியாயங்கள், உயர் கல்விக்கும் பதவி உயர்வுக்கும் முழுமையாகப் பொருந்தும். இல்லையேல், முன்பு வெளியே நிறுத்தப்பட்டிருந்தவர்கள் இப்போது உள்ளே வந்துவிட்டாலும், அவர்கள் அடி நிலைப் படிகளிலேயே நிற்பார்கள், அவர்களுக்கு ஆணையிடுகிறவர்களாக உயர் சாதியினர் உயர் பதவிகளில் அமர்வார்கள். சமூகநீதியை எள்ளல் செய்வதல்லவா இது?

வேறெங்கும் இல்லாதது

இட ஒதுக்கீட்டை எள்ளல் செய்கிறவர்கள் முன்வைக்கிற இன்னொரு வாதம், இந்தியாவத் தவிர வேறு எங்கேயும் இப்படிச் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது என்பது. அதென்னவோ உண்மைதான். இந்தியாவைத்  தவிர வேறு எந்த நாட்டில் சாதிச் சனியன் இருக்கிறது? இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் சாதியும் இருக்கிறது சாதிப் பாகுபாடும் இருக்கிறது. அங்கெல்லாம் அந்தப் பாகுபாடுகளுக்கு முடிவு கட்ட சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவை என்ற குரலும் ஒலிக்கிறது. இதில் அந்த நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதுதான் இந்தியருக்குப் பெருமை. தேசப்பற்றாளர்கள் என்று சொல்லிக்கொண்டு சமூக இட ஒதுக்கீட்டு நியாயத்தை மறுக்கிறவர்கள், இந்தியாவின் இந்த முன்னுதாரணப் பெருமையைக் கீழிறக்குகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

வேறு நாடுகளில் இட ஒதுக்கீடு இல்லையென்றே வைத்துக்கொள்வோம், அதனால் என்ன? இமயம் முதல் குமரி வரையில் இந்தியாவுக்கென்றே உள்ள தனிப்பெருமைகள், வேறு எந்த நாட்டிலும் இல்லாத பெருமைகள், ஏராளமாக இருக்கின்றன. மாமல்லபுரம் சிற்பங்கள், பொங்கல் போன்ற விழாக்கள், வரலாறுகளோடு இணைந்த ஆலயங்கள், காதல் சின்னங்கள், வற்றாத நதிகள், வரலாற்றுத் தலங்கள், எல்லா வகையிலுமான நிலப்பரப்புகள், உலகில் வேறெங்கும் இல்லாத இதிகாசங்கள், மாறுபட்ட வளமான பண்பாடுகள்… என்று அந்த ஏராளப் பெருமைகளைப் பட்டியலிடடத் தொடங்கினால் இப்போதைக்கு முடிவுக்கு வராது. அந்தப் பெருமைகளோடு பெருமையாகப் பிற்காலத்தில் இணைந்ததே இந்த சமூகநீதிப் பெருமை.

அங்கும் உண்டு

மற்ற பல நாடுகளில் இங்கிருப்பது போன்ற அவமானகரமான சாதிக் கட்டமைப்பு இல்லை. ஆகவே சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடும் அங்கே இல்லை. ஆனால், அதற்காக, அந்நாடுகளில் இட ஒதுக்கீடே இல்லை என்று சொல்லிவிடுவதற்கில்லை. இட ஒதுக்கீடு என்ற பெயர் இல்லாமலே பல வடிவங்களில், பல அடிப்படைகளில் இட ஒதுக்கீடு இருக்கவே செய்கிறது.

அமெரிக்காவில் நேர்முக உறுதிச் செயல்பாடு (அஃபர்மேட்டிவ் ஆக்சன்) என்ற பெயரில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட கறுப்பு இன மக்கள், பூர்வ குடிகளின் வாரிசுகள் போன்ற பிரிவினரைக் கைதூக்கிவிடுவதற்கான செயல்பாடாக, கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நிலையாக இத்தனை சதவீதம் என்ற ஒதுக்கீடு இல்லைதான். ஆனால் அந்தந்த வட்டாரத்தின் சமூகப் பின்னணிக்கு ஏற்ப இந்த முன்னுரிமை வழங்கல் பின்பற்றப்படுகிறது. அரசுத் துறைகளில் மட்டுமல்ல, தனியார் துறைகளிலும்! இது தொடர்பான பொது விவாதத்தளத்தில் பதிவு செய்துள்ள இந்தியர் ஒருவர், “நான் அதிகாரியாக வேலை செய்யும் நிறுவனத்தில் சில பணியிடங்களுக்கு ஆளெடுக்கப்போவதாக அறிவித்திருந்தோம். குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை அளிக்குமாறு அரசாங்கத்திடமிருந்து எங்கள் நிர்வாகத்திற்குக் கடிதம் வந்தது,” என்று தெரிவித்திருக்கிறார். வேடிக்கை என்னவென்றால், இதைச் சொல்லிவிட்டு அவர், இந்தியாவிலும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை ஒழித்துவிட வேண்டும் என்று தனது பதிவை முடித்திருக்கிறார்!

பிரிட்டனில் 2010ம் ஆண்டில் சமத்துவச் சட்டம் என்ற ஒரு சட்டம் கொண்டவரப்பட்டது. ஆக்கப்பூர்வச் செயல்பாடு (பாசிட்டிவ் ஆக்சன்) எனப்படும் நடவடிக்கைக்கான பரிந்துரைகள் அந்தச் சட்டத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக அதன் 158, 159 ஆகிய பிரிவுகள், தனியார் துறையினர் உள்ளிட்ட நிறுவனங்களில், பணியாளர்கள் தேர்வின்போது, சமூகச் சமநிலை இருப்பதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்துகின்றன. ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்களில் சிறுபான்மையினர்,  பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பிரதிநிதித்துவத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதை ஏற்றத்தாழ்வைப் போக்கும் வகையில் நியமனங்களை மேற்கொள்ளுமாறு அந்தச் சட்டப்பிரிவுகள் கூறுகின்றன.

சீனாவில் மதம், மொழி, பண்பாடுகள் சார்ந்த சிறுபான்மையினர் அனைவருக்கும் வாய்ப்புகளில் முன்னுரிமை என்ற இட ஒதுக்கீடு உண்டு. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தோர் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கிறபோது, நுழைவுத் தேர்வுகளில் சலுகை மதிப்பெண் உண்டு. சொந்தமாகத் தொழில் தொடங்க முன்வரும் இப்பிரிவினருக்கு வங்கிக் கடன் வழங்குவதில் முன்னுரிமை! முக்கிய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு! உள்ளூர் தொழில்நிறுவனங்கள் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை வழங்க அரசு ஊக்குவிக்கிறது.

மலேசியாவில் 1971ல் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையோடு இணைந்ததாக, சிறுபான்மையினர், நலிவுற்றோர், பின்தங்கிய சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜப்பானில், முந்தைய மன்னராட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தோருக்கு இலவச பள்ளி-கல்லூரிக் கல்வி,  வேலைவாய்ப்பு, குறைந்த வட்டியில் தொழில் கடன் போன்ற ஏற்பாடுகள் இருக்கின்றன.

தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் அணியில் குறைந்தது 6 பேர் கறுப்பு இனத்தவராக இருக்க வேண்டும் என்ற சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்டது. பள்ளிச் சேர்க்கையில் ஏழைக்கு குடும்பங்களின் குழந்தைகளுக்கு கட்டணத் தள்ளுபடி, பின்னடைந்த வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்குக் கூடுதல் நிதியுதவிகள் மூலம் குழந்தைகளுக்குத் தரமான கல்வி, விளையாட்டு அணிகளில் இடம்பெற ஊக்குவிப்பு போன்ற நடவடிக்கைகள் பாகுபாடுகளை ஒழிக்க உதவியாக வருகின்றன.

கட்டுரையாளர் அ. குமரேசன்

விசாரித்தால், இத்தகைய சமூகநீதி நடவடிக்கைகள் இல்லாத நாடுகளே இல்லை என்று தெரியவரலாம். இட ஒதுக்கீட்டால் இங்கே பலன் கிடைத்திருக்கிறதா என்ற வினாவுக்கு, அரசு அலுவலகங்களில் காணப்படுகிற கறுத்த முகங்கள் விடையளிக்கின்றன. ஆனால், அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீட்டு விகிதப்படி பணியாளர்கள் நிரப்பப்படவில்லை என்ற உண்மையும் முகத்தில் அறைகிறது.

இதையெல்லாம் ஒப்புக்கொள்கிறவர்கள், சரி இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தியாவில் இது தொடர வேண்டும் என்று கேட்காமல் முடிக்கமாட்டார்கள். சாதியமும் சாதிப் பாகுபாடும் எந்த வடிவத்தில் தொடருமானாலும், அது முடிவுக்கு வரும் வரையில் இங்கே சமூகநீதிப் பாதுகாப்பு தொடரத்தான் வேண்டும் என நாம் முடிக்கலாம்.

(கட்டுரையாளர்: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். முப்பது வருடங்களுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார்.

இவரைத் தொடர்புகொள்ள: theekathirasak@gmail.com . )