வாஷிங்டன்:  

மெரிக்கா மற்றும் இங்கிலாந்தை தொடர்ந்து 20 நாடுகள் ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி உத்தரவிட்டுள்ளன.

ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது. தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ரஷியாவின் செயல்தான் என ஸ்திரமாக கூறிய இங்கிலாந்து ரஷியாவின் 23 தூதரக அதிகாரிகளை உளவுத்துறையினர் என வெளியேற்றியது. ரஷியாவும் பதிலுக்கு இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. ஆனால் விஷத்தாக்குதலை ரஷியா மறுத்தது. இவ்விவகாரத்தில் இங்கிலாந்துக்கு ஆதரவாக ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு கரம் நீட்டியது. இப்போது அமெரிக்காவும் உளவாளிகள் என ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்காவில் பணியாற்றிய ரஷியாவின் 60 தூதரக அதிகாரிகள் உளவுத்துறை அதிகாரிகள் என கூறிய அமெரிக்கா, சியாட்டில் உள்ள ரஷிய தூதரத்தை மூடவும் உத்தரவிட்டது. இதில் ஐ.நா.விற்கான ரஷியாவின் நிரந்தர மிஷனில் இடம்பெற்ற 12 அதிகாரிகளும் அடங்குவார்கள்.

இருந்தும் இங்கிலாந்து தன் நாட்டில் இருந்து ரஷிய தூதரக அதிகாரிகள் 23 பேரை வெளியேற்றியது. ரஷியாவுடன் ஆன ஒப்பந்தங்களை ரத்து செய்தது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை தொடர்ந்து உக்ரைன், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, செக் குடியரசு, லுதுவேனியா, நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி, அல்பேனியா, ஸ்பெயின், சுவீடன், கரோடியா, ருமேனியா, பின்லாந்து, எஸ்டோனியா, லாத்வியா ஆகிய 20 நாடுகளும் ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி உத்தரவிட்டுள்ளன.

21 நாடுகளில் இருந்தும் மொத்தம் 126 ரஷிய தூதர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.