ஜோத்பூர்:

மான் வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சல்மான் கான் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் ஜாமின் கோரி, ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணையின்போது மாநில அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், சல்மான்கானுக்கு ஜாமின் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1998-ம் ஆண்டு படப்பிடிப்பின் போது அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதமும் ஜோத்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. அதையடுத்து, ஜோத்பூர் மத்திய சிறையில், சல்மான் அடைக்கப்பட்டார்.

அவருக்கு சிறையில் எந்தவித சலுகையும் வழங்கப்பட மாட்டாது என்றும், தற்போது சல்மான்கான், சாமியார் ஆசாராம் பாபு அடைக்கப்பட்டுள்ள  பாரக் 2  என்ற அறையில்  அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் சல்மான்கானுக்கு  கைதி எண் 106 வழங்கப்பட்டதாகவும், அவருக்கு சிறை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்ததாகவும், அவருக்கு சக கைதிகள் அணியும் சீருடையே வழங்கப்படும் என்றும் சிறைத்துறை அதிகாரி கூறியிருந்தார்.

இந்நிலையில், சல்மான்கான் தரப்பில் ஜோத்பூர் நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பை எதிர்த்தும், ஜாமின் கோரியும்   ஜோத்பூர் செஷன்ஸ் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது., இந்த மனு, இன்று விசாரணைக்கு வரவுள்ள தாகவும்,  ஜாமின்கு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில், சல்மான்கான் ஜாமினில் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக  சல்மான் கானின் வழக்கறிஞர், தேசாய் தெரிவித்துள்ளார்.