பெங்களூரு: சிறையில் உள்ள சசிகலாவுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக, பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, வரும் 27ந்தேதி விடுதலையாக உள்ளார். இதற்கிடையில், கடந்த ஒருவாரமாகவே சளி, இருமல், தும்மல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த சசிகலா, நேற்று மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உடனடியாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரேபிட் சோதனை மற்றும், ஆர்.டி மற்றும் பி.சி.ஆர். மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அதில்,  வருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதால் தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இதற்கிடையில், அவருக்கு இரவு மேலும் மூச்சுத்திணறல் அதிகமாக உள்ளதால் ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், சசிகலா உடல்நிலை குறித்த தகவல்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

உடல்நலக்குறைவு என சிறையில் இருந்து ஆம்புலன்சில் சாதாரணமாக அழைத்துச்செல்லப்பட்ட சசிகலா, சிறையில் இருந்து நடந்து சென்றே ஆம்புலன்சில் ஏறியதாகவும், அவர் நார்மலாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுபோல, சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில், சசிகலா சாதாரணமாகவே ஆம்புலன்சில் இருந்து நடந்தே மருத்துவமனைக்குள் சென்ற நிலையில்தான், அவரை  திடீரென வீல் சேரில் அமரவைத்து மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துச் சென்றனர்.

இது  ஏராளமான சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. வருகிற 27 ந்தேதி விடுதலையாக இருப்பதாக  அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ஏன் இந்த நாடகம், இதற்கு சிறைத்துறையும் உடந்தையா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

சசிகலாவுக்கு ஏற்கனவே நீரழிவு, ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளது. அவர், அதற்கான மருத்துவ உதவிகள்பெற்றுதான், கடந்த 4 ஆண்டுகளாக  சிறையில் இருந்து வருகிறார். தற்போதும், அவர் எப்போதும்போலத்தான் சிறையில் இருந்தாக கூறப்படுகிறது. ஆனால், நேற்று திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் என்று கூறி, சிறை அதிகாரிகள் அவரை தனியார் மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதித்துள்ள விவாதப்பொருளாக மாறி உள்ளது.

தற்போது சிவாஜி நகர் மருத்துவமனையில் , அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு அரசியல் நாடகம் என்றும், இதில் ஏதோ மர்மம் உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

உண்மையிலேயே சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்தான் ஏற்பட்டதா? என கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்,  தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்புக்காக, பாஜக நடத்தும் நாடகமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கர்நாடக பாஜக அரசு,  துணை போகிறது என்று  சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தின் பொதுச்சொத்துக்களை கொள்ளையடித்த, கொடுங்குற்றவாளிகளில் ஒருவரான மன்னார்குடி மாஃபியாவின் சிறை விடுதலைக்கு என் இவ்வளவு அலப்பரை என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.