Random image

எலிசபெத் ராணியா? பாலிடிக்சில் தமிழிசை இன்னும் கொஞ்சம் ட்ரைன் ஆகணும்: துரைமுருகன்

சென்னை:

ன்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்கு தமிழிசை எலிசபெத் ராணியா என்று கேள்வி விடுத்த திமுக பொருளாளர் துரைமுருகன், பாலிடிக்சில் தமிழிசை இன்னும் கொஞ்சம் ட்ரைன் ஆகணும் என்று கூறினார்.

அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர்  இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  சென்னை, காஞ்சிபுரம், கோவை, சேலம், மதுரை, நெல்லை போன்ற  இடங்களில் திமுகவினர் அதிமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்  நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கந்தன்சாவடி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  துரைமுருகனிடம், தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுனர் தாக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த துரைமுருகன்,  என்னவென்றே தெரியவில்லை…  உலகத்தின் எலிசபெத் ராணியா தமிழிசை? யாரும், எதையும் கேட்கக் கூடாது என்பதற்கு? இது ஜனநாயகநாடு… கேள்விகள் கேட்பார்கள் என்று கூறினார்.

மேலும், கேள்விக்கு பதில் சொல்லும் பண்பாடு திராவிட இயக்கத்துக்கு மட்டுமே உண்டு என்றும்,  மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே, சீட்டுகளில் கேள்விகள் வந்து கொண்டிருக்கும். அதற்கு பதலளித்துக் கொண்டே இருப்போம் என்றவர், ஒருதடவை  எல்லாம் பொதுவுடைமைன்னு சொல்றியே, உன் மனைவி நாகம்மை பொதுவுடைமையா என்று, தந்தை பெரியாரிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும்,  அதற்கு பதிலளித்த பெரியார், முடிந்தால் கூட்டிச் செல் என்று கூறினார் என்பதை நினைவு கூர்ந்தார்.

கேள்வி கேட்பதனால், ஒருவர் மீது கேஸ் போடுவது, அடிப்பது என்பது எந்த காலத்து ஜனநாயகம் என்று கேள்வி எழுப்பிய துரைமுருகன்,  பாலிடிக்சில் தமிழிசை இன்னும் கொஞ்சம் ட்ரைன் ஆகணும் என்றும், அவர் சிறு வயது முதல் தனக்கு தெரியும் என்றும்  கூறினார்.