“நடிகர் சிவாஜி கணேசனை ராசியில்லாதவர் என்பது தவறு” என்று கண்டனம் தெரிவித்ததோடு, சில வரலாற்று நிகழ்வுகளையும் பட்டியலிட்டிருக்கிறார் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை யின் தலைவர் கே. சந்திரசேகரன்.

தினமலர் நாளேட்டில், நேற்று (அக்டோபர் 8) “திருப்பதி தரிசனமும் சிவாஜி சிலை வதந்தியும்” என்ற தலைப்பில்  கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. இக்கட்டுரை, சிவாஜி ரசிகர்களை புண்படுத்துவதாகக் கூறி, கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் கே.சந்திரசேகரன்.

அந்த அறிக்கை:

சிவாஜியின் அரசியல் ராசி குறித்து அவதூறாக தினமலரில் வெளிவருவது  இது முதல் முறை யல்ல.  ஆனாலும் எங்களுடைய மறுப்பையும். அப்படிப்பட்ட அவதூறு செய்திகளுக்கான விளக்கத்தையும் தங்களுக்குத் தெரிவிப்பது எங்களது கடமையாகும்.

2006 -ல்  சிவாஜி சிலையை திறந்த கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்று அக் கட்டுரை யில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், 2006 ஆம் ஆண்டு  தி.மு.கவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துத்தான் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகும், ஆட்சிக்கு வந்தவுடனேயே சிலையை நிறுவிய கலைஞரின் ஆட்சி முழு ஐந்து ஆண்டு காலமும் ஆட்சிப் பொறுப்பில் நீடித்து நிறைவு செய்தது.

அது மட்டுமல்ல. 1987 – எம்.ஜி.ஆர் ஆட்சிக்குப் பிறகு. எந்த அரசும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது இல்லை.

ஆனால் 2015 -ஆகஸ்டில் சட்டப்பேரவையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சிவாஜிக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தார்.  அதன்பிறகுதான். 2016 சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து வரலாறு படைத்தார்.

மேலும். ஜெயலலிதாவின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்குத் தலைமையேற்று நடத்தியவர் நடிகர்திலகம் சிவாஜி.  அப்போது. “தங்கச்சிலையாக ஜொலிக்கும் இந்தப் பெண்ணுக்கு ஒளிமய மான எதிர்காலம் இருக்கிறது” என்று  வாழ்த்திய சிவாஜியின் வாக்குப்படியே திரையுலகிலும். அரசியலிலும் ஜெயலலிதா ஜொலித்தார் – இதுதான் வரலாறு.

2006 -ல் கலைஞருக்கு முன்னதாக சிவாஜிக்கு சிலை அமைத்தவர் புதுவை முதல்வராக இருந்த ரங்கசாமி.  அதன்பிறகு நடைபெற்ற 2011  புதுவை சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்த மூன்றே மாதங்களில். தனித்து ஆட்சியைப் பிடித்து ஐந்து ஆண்டுகாலம் முதல்வராக பணியாற்றினார் ரங்கசாமி என்பதும் வரலாறு.

அதேபோல. சென்னை சத்தியமூர்த்தி பவனில் சிவாஜி படத்தை வைத்தபின் காங்கிரஸ் தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக எந்த ஆதாரமும் இன்றி பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அப்படி எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என்பதும். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி என்பது.  அகில இந்திய தலைமையால் பலமுறை மாற்றம் செய்யப்படும் வழக்கமான நடைமுறையை, வேண்டுமென்றே சிவாஜி படத்தைத் திறந்ததால் பறிக்கப்பட்டதாக கூறியிருப்பது கண்டனத்துக்குரியதாகும்.

நடிகர்திலகத்தின் ஆதரவாளராக அறியப்பட்ட EVKS. இளங்கோவன்தான் தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.  நடிகர்திலகம் சிவாஜி பிறந்தநாள் விழாவை நடத்திய பின்னர்தான் இளங்கோவன் மீண்டும் தமிழக காங்கிரஸ் தலைவரானார்.

கடந்த  ஆண்டு சிவாஜி-பிரபு அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக, மத்திய அமைச்சராகக் கலந்துகொண்ட வெங்கையா நாயுடு, இந்த ஆண்டு துணை ஜனாதிபதியாக உயர்ந்திருக்கிறார்.

சிவாஜி சிலையையோ படத்தையோ திறந்தவர்கள், நடிகர்திலகத்தைப் போற்றியவர்கள் யாரும் கெட்டதில்லை.  அவருடைய சிலையை அகற்ற நினைத்தவர்களுக்குத்தான் கேடு விளைந்தது என்பதுதான் வரலாறு.

இதுபோன்ற, சிவாஜியால் வாழ்ந்தவர்களின் சிவாஜியைக் கெடுக்க நினைத்து வீழ்ந்தவர்களின் வரலாறு ஏராளமாக உள்ளது.  தேவையென்றால் தங்களுக்கு அவற்றைத் தொகுத்து தர தயாராக உள்ளோம்.

இனியும் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியோடு யாரோ தரும் தகவல்களைக் கொண்டு வரலாற்றைத் திரித்து செய்தியாக வெளியிட்டு  நடிகர்திலகத்தின் லட்சோபலட்சம் ரசிகர்களை புண்படுத்தவேண்டாம் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கே.சந்திரசேகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.