அரசியலில் சில வாதங்களுக்கும் கேள்விகளுக்கும் உடனடி தீர்வுகள் கிடைத்து விடுவதில்லை. அப்படி கிடைப்பதையும் சிலர் விரும்புவதில்லை. அப்படியான வாதங்களும் கேள்விகளும், தமிழக அரசியலை சுற்றி கடந்த சில ஆண்டுகளாக உலவிக் கொண்டுள்ளன.

மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. அவர் தலைமையில், ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை திமுக சந்தித்து, அதில் பெரிய வெற்றியையும் ஈட்டியாகிவிட்டது. ஆனாலும், அவர் தனது தந்தை கலைஞர் கருணாநிதியோடு ஒப்பிடுகையில் பல விஷயங்களில் திறமை குறைந்தவர் என்ற வாதங்களும் கருத்துகளும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.

அவர்களில் பெரும்பான்மையினர், வலதுசாரி முகாமைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், அந்த முகாமைச் சாராத சிலரும், கலைஞர் கருணாநிதி அளவிற்கு ஸ்டாலின் திறமையானவரா? என்ற சந்தேகத்தை எழுப்பவே செய்கின்றனர்.

காலச் சூழல்களும் தேவைகளுமே ஒருவரின் செயல்பாட்டு பாணியை தீர்மானிக்கின்றன. கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் அதில் முக்கியப் பங்குண்டு. அப்படி பார்க்கையில், தனது 50 ஆண்டுகால அரசியல் பயணத்தில், ஸ்டாலின் நிறையவே கற்றுக்கொண்டுள்ளார் மற்றும் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

கலைஞர் கருணாநிதி, மிக எளியப் பின்னணியிலிருந்து வந்து திமுக தலைவரான சூழலை, ஒரு தலைவரின் மகன் என்ற தகுதியைப் பிரதானமாக வைத்து, ஸ்டாலின், தலைவர் பதவியில் அமர்ந்ததை குறைசொல்லிக் கொண்டிருந்தால், இந்திய அரசியல் சூழலில் அது நகைப்பிற்குரிய ஒன்றே!

கலைஞர் கருணாநிதி – ஸ்டாலின் இருவரையும், ஒரு தனியான பாணியை உருவாக்கி, மெனக்கெட்டு ஒப்பிட வேண்டிய தேவை நமக்கில்லை என்பதால், ஸ்டாலின் விமர்சகர்கள் அவர்மீது என்ன குற்றச்சாட்டுகளை வைக்கிறார்களோ, அவற்றை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு மட்டுமே பதில் சொன்னால் எளிமையாக முடிந்துவிடும் என்பது நமது நம்பிக்கை.

எனவே, கேள்வி – பதில் பாணியிலேயே இக்கட்டுரை பயணிக்கிறது.

விமர்சனம்: கலைஞர் கருணாநிதியைப் போன்று ஸ்டாலினிடம் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் கிடையாது.

பதில்: அரசியலுக்கு இந்த ஆற்றல்களைப் பிரதான தகுதியாக எடுத்துக்கொண்டால், தமிழகம் உள்பட, இந்த நாட்டில் பல அரசியல் தலைவர்கள் ஜெயித்திருக்கவே முடியாது மற்றும் ஜெயிக்கவே முடியாது.

விமர்சனம்: கடந்த 2001 சட்டமன்ற தேர்தலில், ஸ்டாலின் முன்னின்று அமைத்த சாதி கட்சிகளின் கூட்டணி தேர்தலில் எடுபடவில்லை. அந்த முயற்சி, தமிழக தேர்தல் அரசியல் குறித்த அவரின் தெளிவின்மை மற்றும் அனுபவமின்மையை பறைசாற்றுகிறது.

பதில்: அது 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம். அப்போது ஸ்டாலின் திமுகவின் தலைவர் அல்ல. வேறு எந்த முக்கிய கட்சிப் பதவியிலும் அவர் இல்லை. எனவே, அந்த முடிவை ஸ்டாலின்தான் முற்றுமாக மேற்கொண்டாரா என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

இதில், இன்னொன்றையும் கவனிக்க வேண்டியது கட்டாயம். இங்கே நாம் முரசொலி மாறன் குறித்து சிலர் எழுதிய குறிப்புகளையும் நினைவில் கொண்டுவர வேண்டியுள்ளது.

“கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது, தானும் மத்திய அமைச்சராக இருந்தேயாக வேண்டுமென்பதில், முரசொலி மாறன் எப்போதும் பிடிவாதமாக இருப்பார். எனவே, கடந்த 1999ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில், முரசொலி மாறனின் பங்களிப்பு பெரியளவில் உண்டு. மேலும், கலைஞர் கருணாநிதி விரும்பியோ விரும்பாமலோ, 2001 சட்டமன்ற தேர்தலிலும், பாஜகவுடன் கூட்டணியைத் தொடருமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார். அப்போதுதான், தான் மத்திய அமைச்சராக தொடர முடியும் என்பது முரசொலி மாறனின் ஆசை” என்பதுதான் அந்த விமர்சனக் கூற்று.

இந்தக் கூற்றின் உண்மைத்தன்மை குறித்த ஆராய்ச்சி இப்போது தேவையில்லை. ஆனால், நடந்தது என்ன? பாஜகவை காரணம் காட்டி, முக்கிய கட்சிகள் பலவும் அதிமுக பக்கம் சென்றுவிட்டன. கலைஞர் கருணாநிதி பலமுறை கூட்டணிக்காக அழைப்பு விடுத்தும், மூப்பனாரின் தமாகா திரும்பிப் பார்க்கவில்லை.

பாமக, மதிமுக கட்சிகள்கூட கழன்ற பிறகு, அப்போது புதிதுபுதிதாக முளைத்த சாதிக் கட்சிகள்தான் திமுகவிற்கான வாய்ப்பாக அமைந்தன. சாதிய அரசியல் கோலோச்சும் தமிழ்நாட்டில், சாதிக் கட்சிகளும் வாக்குகளை வாங்கலாம் என்ற கணக்கீடு அப்போது ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு உருவாகியிருந்தால் அதில் பெரிதாக தவறு சொல்ல முடியாது.

அந்த சாதிக் கட்சிகளில் ஒன்றுகூட தேறாமல் போனதற்கு இன்னொரு காரணம், அவை அனைத்தும் தனித்தனி சின்னங்களில், மக்களுக்கு அறிமுகமில்லாமல் போட்டியிட்டன என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே, 2001 சட்டமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக, ஸ்டாலினை முழுதாக குற்றம் சுமத்த நம்மிடம் ஆதாரங்கள் கிடையாது.

விமர்சனம்: 2017ம் ஆண்டு சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடியின் அரசை ஸ்டாலினால் கவிழ்க்க முடியவில்லை. ஆனால், கலைஞர் கருணாநிதியாக இருந்திருந்தால் கவிழ்த்திருப்பார்!

பதில்: இந்த விமர்சனத்தை எந்த அடிப்படையில் கூறுகிறார்கள் என்றே தெரியவில்லை. கலைஞர் கருணாநிதி ஆக்டிவாக இருந்திருந்தால் கவிழ்த்திருப்பார் என்பதை எப்படி நிறுவுவார்கள்? சரி போகட்டும்.

பாஜகவின் விருப்பத்தை மீறி, அதிமுகவின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களை கூவத்தூருக்கு கடத்திச் சென்ற சசிகலா குழுவினர், சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு மிகுந்த விரிவான திட்டமிடுதல்களோடு வந்தார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அக்குழுவினரின் கட்டுப்பாட்டில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், பெரியளவில் விலை பேசப்பட்டிருந்தார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, திமுக ஒரு உத்தியைப் பின்பற்றியது. ஆனால், அது கைகொடுக்கவில்லை. அது சிறந்த உத்தியா? என்ற விவாதம் இங்கு தேவையில்லை.

இதில், இன்னொரு முக்கிய விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். டெல்லி பாஜக தலைமை, சசிகலா ஆதிக்கமற்ற ஒரு அதிமுக ஆட்சியை அப்போது விரும்பியது எந்தளவு உண்மையோ, அதேபோன்று அது திமுகவின் ஆட்சியை எள்ளளவும் விரும்பவில்லை என்பதும் மிகப்பெரிய உண்மை. தமிழகத்தில், உடனடியாக ஒரு சட்டமன்ற தேர்தலை நடத்துவது பாஜகவின் திட்டத்தில் கிடையாது. எனவே, ஸ்டாலின் என்னதான் குட்டிக்கரணம் அடித்திருந்தாலும், 2017ம் ஆண்டு எடப்பாடியின் அரசை கவிழ்த்திருக்க முடியாது என்பதே நடைமுறை உண்மை.

விமர்சனம்: திமுக செயல் தலைவராக ஸ்டாலின் எதிர்கொண்ட ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தோற்றுப்போனார். ஒரு முக்கியமான இடைத்தேர்தலில் என்னமாதிரியான வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்ற புரிதல்கூட அவருக்கில்லை. ஆனால், கலைஞர் கருணாநிதியாக இருந்திருந்தால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வென்றிருப்பார்.

பதில்: ஆர்கே நகர் இடைத்தேர்தல் தோல்வி என்பது திமுகவிற்கு ஒரு பெரிய பின்னடைவுதான். சாதாரண தொண்டர்களுக்கு, திமுகவில் சீட் கிடைப்பதில்லை என்ற விமர்சனத்தை துடைக்க, ஒரு முக்கியமான தேர்தலில் முடிவெடுத்தது தவறுதான். அதேசமயம், அத்தேர்தல் எப்படி நடைபெற்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஒருபக்கம், பாஜகவின் மாபெரும் ஆசிர்வாதத்துடன், அனைத்துவிதமான அதிகாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு களமிறங்கியது அதிமுக. இன்னொருபுறம், வேறுவகை உத்திகளுடன் களமிறங்கினார் டிடிவி தினகரன்.

அதிமுகவிற்கு இயல்பான செல்வாக்குள்ள அந்தத் தொகுதியில், உண்மையான அதிமுக யார்? என்பதாய் போட்டி மாறிவிட்டது. ஜெயலலிதாவின் மரணத்தை முன்வைத்த தேர்தலாய் இது மாற்றப்பட்டது.

இதன் காரணமாக, இத்தேர்தலில் திமுக வென்றால் ஆட்சி கவிழும் என்ற ஸ்டாலினின் பிரச்சாரம் எடுபடாமல் போய்விட்டது. ஆனால், தான் வென்றால் ஆட்சிக் கவிழும் என்று தினகரன் முன்வைத்த பிரச்சாரம், சில காரணங்களால் எடுபட்டது. அனைத்துவிதமான அதிகாரங்களும் களமிறங்கிய இத்தேர்தலில், அது எதுவுமே இல்லாத திமுக ஜெயிப்பது சாதாரண விஷயமல்லவே!

கலைஞர் கருணாநிதியாக இருந்திருந்தால், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வென்றிருப்பார் என்ற வாதம் முற்றிலும் நிராகரிக்கத்தக்கது. தான் ஆட்சியில் இருந்தபோதே பல இடைத்தேர்தல்களில் தோற்றவர்தான் கலைஞர் கருணாநிதி.

விமர்சனம்: ஸ்டாலின் மிக எளிதாக மற்றும் நோகாமல் தலைவர் பதவியை அடைந்துவிட்டார். அவரைவிட திறமையான பலர் கட்சியில் இருக்கிறார்கள்.

பதில்: இந்த விமர்சனம் வாரிசு அரசியல் என்ற கோணத்தில் மட்டும் வைக்கப்பட்டால், இந்திய அரசியல் சூழலில் பெரும் நகைப்பிற்குரியதாகும். ஏனெனில், எங்கெல்லாம் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உதாரணம் காட்ட வேண்டியிருக்கும். இவ்வளவு ஏன், அதிமுக தலைவியாக ஜெயலலிதா எந்தளவிற்கு பாடுபட்டு வந்தார்? என்பதற்கு பதில் சொல்லும் சிக்கலும் விமர்சகர்களுக்கு ஏற்படும்.

வாரிசு அரசியல் என்ற விஷயத்தில், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய அரசியல் வரலாற்றில், ஸ்டாலினைப் போல் நீண்டகாலம் காத்திருந்தவர்கள் யாருமில்லை என்றே கூறலாம். முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பின் மகன்கள், மணிமகுடத்திற்காக காத்திருந்ததைப்போல், ஸ்டாலின் நீண்டகாலம் காத்திருந்தார் என்றே கூறலாம்.

பதின்ம வயதில், தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர், 65 வயதில்தான் கட்சித் தலைவர் பதவியை அடைகிறார். பல விஷயங்களில் அசாத்தியப் பொறுமையை கடைப்பிடித்தவர் என்பதை நிச்சயம் மறுக்க முடியாது. உணர்ச்சி வயப்பட்டு, உள்விவகாரங்களை பொது வெளியில் அவர் கொட்டியது கிடையாது.

அரசியலில் பெரிய ஈடுபாடோ, பங்களிப்போ இல்லாமல், தமது 20கள் மற்றும் 30 வயதுகளில் முக்கியப் பொறுப்புகளுக்கு வந்த அரசியல் வாரிசுகள் இந்தியாவில் பலருண்டு.

விமர்சனம்: கொங்கு மண்டலத்தில் திமுக பலமடைவதில் பல பிரச்சினைகள் உள்ளன. இதை ஸ்டாலினால் சரிசெய்ய முடியவில்லை. ஆனால், கலைஞர் கருணாநிதியாக இருந்திருந்தால் அதை சரிசெய்திருப்பார்.

பதில்: இது ஒரு நகைப்பிற்குரிய விமர்சனம். திமுகவைப் பொறுத்தவரை, வடக்கு மற்றும் மத்திய மண்டலத்தில்தான் எப்போதுமே வலுவாக இருக்கும். தெற்கு மற்றும் கொங்குப் பகுதிகளில் அதற்கு எப்போதுமே பிரச்சினைதான். எனவே, அப்பகுதிகளில், அதிமுக இயல்பாகவே காலூன்றி விட்டது.

எப்போதுமே பிரச்சினையாக இருந்துவரும் ஒரு விஷயத்திற்கு, ஸ்டாலினைக் குறிப்பிட்டு குறை சொல்வதில் எந்த லாஜிக்கும் இல்லை.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, கொங்குப் பகுதியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், வெள்ளாளக் கவுண்டர்களையும், அருந்ததியர்களையும் இணைத்து, திமுக வாக்கு வங்கியாக மாற்ற ஸ்டாலின் முயன்றதை நினைவில் கொணர வேண்டியுள்ளது.

விமர்சனம்: குறுநில மன்னர்கள் பாணி அரசியலையும், பண அரசியலையும் கட்சிக்குள் ஸ்டாலின் ஊக்குவிக்கிறார்.

பதில்: குறுநில மன்னர் பாணி அரசியல் என்பது, ஸ்டாலினுக்கு முன்பிருந்தே திமுகவில் உருவான ஒரு விஷயம். எந்தெந்த கட்சிகளில் வாரிசு அரசியல் இருக்கிறதோ, அங்கெல்லாம் குறுநில மன்னர் பாணியும் கட்டாயம் இருக்கும்.

பண அரசியல் என்பது காலத்தின் அடையாளமாக மாறியுள்ளது. அதிமுகவில், தேர்தல்களில் சாதாரண நபர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்களின் செலவுக்கு கட்சித் தலைமையே கணிசமாக பொறுப்பேற்கும். அந்தளவிற்கு நெகிழ்வுத்தன்மை திமுகவில் இல்லை என்பது உண்மையே! செலவினங்கள் பெரும்பாலும் வேட்பாளர்களின் பொறுப்பிலேயே விடப்படுகின்றன எனும் விமர்சனங்களே அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அதேசமயம், அதிமுகவில் அப்படி வாய்ப்பை பெற்ற சாதாரணப் பின்னணி கொண்டவர்கள், மக்களுக்கு எந்தளவிற்கு பயனுள்ளவர்களாய் இருந்தார்கள் என்பதும் கேள்வியாக எழுகிறது. எனவே, இப்பிரச்சினையானது அதிகம் கட்சி சார்ந்ததும், தனிநபர் நலன் சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறதே ஒழிய, சமூக நலன் சார்ந்த ஒன்றாக இல்லை.

விமர்சனம்: தனது திறமையின் மீது நம்பிக்கையில்லாத ஸ்டாலின், பிரஷாந்த் கிஷோர் போன்ற வியூக வகுப்பாளர்களை நம்பியே அரசியல் நடத்துகிறார். ஆனால் கலைஞர் கருணாநிதி அப்படியா இருந்தார்?

பதில்: தேர்தல் அரசியல் என்பது காலச்சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும் விஷயம். கடந்த 50 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தேர்தல் அரசியல் சூழலும், இப்போதைய சூழலும் நிச்சயமாக பெரியளவில் மாறுபட்டவை. இன்றைய தேர்தல் அரசியல் என்பது அதிகம் கார்ப்பரேட் மயப்பட்டுள்ளது. மேலும், சமூகவலைதளங்கள் உள்ளிட்ட தகவல்தொடர்பு ஊடகங்களின் வளர்ச்சி ராட்சசத்தனமாக உள்ளது. பொய்ப் பிரச்சாரங்கள் வேறு லெவலில் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. எனவே, இவற்றையெல்லாம் சமாளித்தாக வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு உள்ளது.

மேலும், பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் வியூக விற்பன்னர்களை பயன்படுத்தியுள்ளன மற்றும் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், பிரஷாந்த் கிஷோர் விஷயத்தை, திமுக தலைவர் ஸ்டாலின், ஏதோ கட்சியின் மாபெரும் அம்சம்போல், இந்தளவு வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டியதில்லை; அதை சாதாரணமாக டீல் செய்திருக்கலாம் என்ற சில விமர்சகர்களின் கருத்தை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.

தன் கட்சியை சுற்றிலும் சவால்களும் சதித்திட்டங்களும் நிறைந்து கிடக்கும் ஒரு நெருக்கடியான கட்டத்தில், தேர்தல் வியூக விற்பன்னர்களையும் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. அதை திறமையின்மைக்கான அடையாளமாக கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், எப்போதுமே திமுக என்று வரும்போது, தமிழ்நாடு மட்டுமின்றி, அகில இந்திய அளவில்கூட தேவையற்ற, சம்பந்தமில்லாத மற்றும் அபாண்டமான எதிர்ப்புணர்வுகளும், குற்றச்சாட்டுகளும் கிளப்பி விடப்படும். இவற்றையெல்லாம் சமாளித்தே கரையேற வேண்டியுள்ளது.

கலைஞர் கருணாநிதியின் தேர்தல் வியூக செயல்பாடுகள் என்று எடுத்துக்கொண்டால், அவை பலமுறை தோல்வியைத் தழுவியுள்ளதை, ஏன், சமயங்களில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளதை மறந்துவிட முடியுமா? கட்சியின் முக்கியஸ்தர்களுடைய ஆலோசனைகள் மட்டுமே கரைசேர்த்துவிடுமா? எனவே, நெருக்கடியான நேரங்களில், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மட்டுமே போதுமான ஒன்றாக இருப்பதில்லை என்பதே நடைமுறை உண்மை.

ஜெயலலிதா இப்படியெல்லாம் கிடையாதே? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டால், ஜெயலலிதாவின் அரசியல் முடிவுகளில், சசிகலா-நடராஜனின் பங்கு எந்தளவிற்கு இருந்தது என்பதற்கான தெளிவான விடை கிடைத்தாலொழிய, ஜெயலலிதாவின் மதிநுட்பத்தைப் பற்றி மதிப்பிடுவது கடினம் மற்றும் அபத்தமானதும்கூட.

விமர்சனம்: கூட்டணி கட்சிகளைக் கையாள்வதில், கலைஞர் கருணாநிதியைப் போன்று சாமர்த்தியமாகவும் திறமையாகவும் செயல்படுவாரா ஸ்டாலின்?

பதில்: இந்த விஷயத்தில், தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து திறமையாகவே செயல்பட்டு வருகிறார் ஸ்டாலின். இந்த விஷயத்தில், அவர் மறைந்த ஜெயலலிதாவின் பாணியையும் கொஞ்சம் சேர்த்தே கையாள்கிறார் எனலாம். ஏனெனில், அதிகமான நெகிழ்வுத்தன்மை, எதிராளிக்கு தேவையற்ற தைரியத்தை வரவழைத்து விடுகிறது.

கலைஞர் கருணாநிதி, தனது காலத்தில் பல விஷயங்களில் தேவையற்ற நெகிழ்வுத்தன்மையை கடைப்பிடித்தார். இதுவே, அவரின் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தைரியத்தை கொடுத்ததுடன், அவரின் எதிராளிகளுக்கு சாதகமாகவும் முடிந்துபோனது.

2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை அதிக சாதக அம்சங்களுடன் சந்தித்த கலைஞர் கருணாநிதி, திமுகவுக்கு பெற்றுக்கொடுத்த இடங்கள் 15 மட்டுமே. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலை அதே சாதக அம்சங்களுடன் சந்தித்த ஸ்டாலின், திமுகவுக்கு பெற்றுக்கொடுத்த இடங்கள் 24. கடந்த 1971ம் ஆண்டிற்கு பிறகு, மக்களவைத் தேர்தலில் திமுக 20 இடங்களுக்கு மேல் முதன்முறையாக இப்போதுதான் வென்றுள்ளது! ஆனால், இத்தகைய சாதக அம்சங்கள் இருந்த 1996 மக்களவைத் தேர்தல் மற்றும் 2009 தேர்தலில் கலைஞர் கருணாநிதி, தன் கட்சிக்கென்று அதிக இடங்களை வெல்வதற்கு தவறினார். இப்படியான உதாரணங்களை இன்னும் பல கூறலாம்.

பாமக விஷயத்தில் ஸ்டாலினின் செயல்பாடு பாராட்டும்படியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி அச்சப்படும் வகையிலேயே அதை டீல் செய்கிறார். மதிமுக மற்றும் விசிக போன்ற கட்சிகளை விட்டுப் பிடிக்கிறார். கம்யூனிஸ்டுகளை சைலன்ட் மோடில் வைத்துள்ளார். கடந்த 2001 மற்றும் 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில், மதிமுகவை, கலைஞர் கருணாநிதி இழந்திருக்காமல் சமாளித்திருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. கலைஞர் கருணாநிதி செய்த தவறு, திமுக பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதித்தது என்பதை மறுப்பதற்கில்லை.

எதற்கும் அவசரப்பட்டு ஸ்டாலின் கருத்துகளை உதிர்த்து விடுவது கிடையாது. பதற்றமடையாமல், கட்சியின் வேறு தலைவர்களை வைத்தே பலவற்றுக்கும் பதிலளிக்கிறார். அதேசமயம், அதிமுகவின் தலைமையை எதிர்த்து மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்லில் ஸ்டாலின் சறுக்கினார் என்பது உண்மையே! அதேசமயம், ஒரு தலைவராக, சட்டமன்ற பொதுத்தேர்தலை ஸ்டாலின் இப்போதுதான் முதன்முறையாக சந்திக்கிறார். எனவே, இப்போதே பல விஷயங்களை முடிவுகட்டுவதை, அவசரக் குடுக்கைத்தனம் அல்லது தனிநபர் வன்மம் அல்லது திமுக மீதான வெறுப்பு என்பதாகவே கொள்ள முடியும்.

விமர்சனம்: கலைஞர் கருணாநிதி போன்று திறமையான ராஜதந்திரியாக செயல்படுவாரா ஸ்டாலின்?

பதில்: திமுக தலைவராக பொறுப்பேற்ற இந்த 2 ஆண்டுகளில், திறமையற்றவர் என்று சொல்லும் அளவிற்கு ஸ்டாலின் எந்த பெரிய தவறையும் செய்துவிடவில்லை. இத்தகைய ஒப்பீட்டை கொண்டுவரும் அளவிற்கு, எந்த காலமும் கடந்துவிடவில்லை.

தனது அரைநூற்றாண்டு கால அரசியல் பயணத்தில், பல விஷயங்களை கற்றுக்கொண்டவராகவே தென்படுகிறார் ஸ்டாலின். இவருக்கு சமமாக, தனது அரசியல் அனுபவமற்ற மற்றும் அரசியல் செயல்பாடுகளை பெரியளவில் மதிக்காத தன் மகன் அன்புமணியை முன்னிறுத்த முயன்ற பாமக தலைவர் ராமதாசின் முயற்சியை சுத்தமாக கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, அதை முளையிலேயே கிள்ளியெறிந்தார் ஸ்டாலின். கலைஞர் கருணாநிதியைப் போன்று, தேமுதிகவுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து, அக்கட்சியை வளர்த்துவிட விரும்பவில்லை ஸ்டாலின்.

இராமருடைய தம்பியின் பெயரைக்கொண்ட தமிழ்நாட்டு அரசியல் விமர்சகர் ஒருவர், முன்பொருமுறை, 2016 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்திடம் இறங்கிப் போகாததன் விளைவு, ஸ்டாலின் பெரிய இழப்பை சந்தித்தார் என்று விமர்சித்து, ஸ்டாலினைவிட, விஜயகாந்தை ஏற்றி மதிப்பிட்டார்.

1978ம் ஆண்டு முதல் நடிகராக இருந்து, கடந்த 2006ம் ஆண்டு அரசியல்வாதியாக மாறிய விஜயகாந்தைவிட, கடந்த 1960களின் இறுதி முதல் அரசியல்வாதியாக மாறி, 1970களில் மிசா கைதியாக சிறை சென்று, அரசியலில் மாபெரும் பொறுமை காத்து வளர்ந்த ஸ்டாலின் எந்தவகையில் குறைந்துவிட்டார் என்பதை, அந்த விமர்சகரிடம்தான் கேட்க வேண்டும்.

முதல்வர் அரியணையின் மீது ஆசைக்கொண்டு, 10%க்கு மேல் தனது வாக்கு வங்கியை காட்டிய தேமுதிகவுக்கு, வெறும் 41 இடங்களைக் கொடுத்து ஜெயலலிதா அடக்கிவிட, 2014 நாடாளுமன்ற தேர்தலில், 5.1% வாக்குகளை மட்டுமே பெற்ற தேமுதிகவுக்கு, 2016 சட்டமன்ற தேர்தலில் எவ்வளவு இடங்களைக் கொடுத்துவிட முடியும்?

அன்று ஸ்டாலினின் செயல்பாட்டால்தான் தேமுதிக கூட்டணியில் இணையாமல் போய், திமுக வெற்றிவாய்ப்பை இழந்தது என்று வைத்துக்கொண்டாலும், தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில், மிக அதிக இடங்களைப் பெற்ற எதிர்க்கட்சியாக உருவானது திமுக.

ஆனால், தேமுதிகவின் நிலை? அன்று தொடங்கிய பெருவீழ்ச்சி, அக்கட்சியை இன்று மரணத்தின் விளிம்பில் வைத்துள்ளது. அதிமுக கூட்டணியிலோ அல்லது தனியாகவோ அக்கட்சி போட்டியிட்டால், இத்தேர்தலே அக்கட்சிக்கான கடைசித் தேர்தலாக இருக்கும் என்பதே அரசியல் கணிப்பு.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் திமுகவின் தலைவராக பதவி வகித்த கலைஞர் கருணாநிதி, அதற்கான நியாயத்தை நன்றாகவே செய்தார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அதேசமயம், தலைவர் பொறுப்பேற்ற இரண்டாண்டுகளில் ஸ்டாலினை ஒப்பீட்டுக்கு கொண்டு வருவது முறையற்ற செயல்.

விமர்சனம்: பாஜக முன்வைக்கும் விமர்சனங்கள் தொடர்பாக தேவையின்றி பதற்றமடைகிறார் ஸ்டாலின்.

பதில்: அந்தந்த இடத்தில் இருந்து பார்ப்பவருக்குத்தான் பதற்றம் தெரியும். தமிழகத்தில், ‘சாஃப்ட் இந்துத்துவா’ என்றதொரு அரசியல் மனநிலை உண்டு. அந்த வாக்குகள் எப்போதும் அதிமுகவுக்கு செல்பவை.

தமிழ்நாட்டில், சிறுபான்மையினர் என்ற அளவில் மதவாத அரசியல் உண்டே தவிர, பெரும்பான்மை மதவாத அரசியல் இருப்பதில்லை. ஏனெனில், அந்த பெரும்பான்மை என்பது ஜாதிகளாகப் பிரிந்துவிடும்.

பாஜக இப்போது அடித்துஆடும் ஆட்டத்தை, கடந்த காலங்களில் எப்போதும் ஆடியதில்லை. அவர்களின் வாக்கு வங்கி சில சதவிகிதங்கள் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வாக்கு வங்கியில், தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாறு தெரியாத இளைய தலைமுறையினர்(படித்த இளைஞர்கள்) கணிசமாக இருக்கலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேர்தல் அரசியலில், பெரும்பான்மை இந்துத்துவ உணர்வைக் கொண்டுவருவது என்ற பாஜகவின் முயற்சி அவ்வளவு எளிதாக பலித்துவிடும் என்பது நம்புவதற்கில்லைதான். ஏனெனில், 1998ம் ஆண்டைப்போன்ற(கோவை கலவரம்) அல்லது அதைவிட பெரிய ஒரு வாய்ப்பு, பாஜகவுக்கு இப்போதுவரை தமிழகத்தில் கிடைக்கவில்லை.

ஆனாலும், எதையும் அலட்சியமாகப் புறந்தள்ளுவதற்கில்லை. 2ஜி ஊழல் என்ற ஏற்கமுடியாத மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்சாட்டு திமுகவின் மீது கடந்த காலங்களில் சுமத்தப்பட்டபோது, அதுகுறித்து தேவையான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளலாமல், திமுக அசட்டையாக இருந்ததன் விளைவு, நிறையவே அனுபவித்தது. எனவே, ஸ்டாலின் சிறிய விஷயத்தில்கூட அலர்ட்டாக இருக்கிறார் என்ற முடிவிற்கே வர முடிகிறது.

அதேசமயம், பாஜகவுக்கு பதிலடி தருவதிலேயே அவர் அதிகநேரம் செலவழிக்கிறார் என்றும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழக அரசியல் களத்தை திமுக vs அதிமுக என்பதாக தக்கவைத்துக் கொள்வதிலேயே அவர் அதிக நேரம் செலவழிக்கிறார் என்பதே நடைமுறையாக இருக்கிறது.

(நிறைவு)

 – மதுரை மாயாண்டி