திருவனந்தபுரம்

கேரளா வழியாக ஊடுருவும் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியா மற்றும் இலங்கையில் தாக்குதல் நடத்த உள்ளதாக சர்வதேச காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் ஐ எஸ் தீவிரவாதிகளால் நடத்தப் பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.   உலகெங்கும் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   அத்துடன் ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இந்த இயக்கத்தால் கைப்பற்ற பட்ட பகுதிகள் மீட்கப்பட்டு அங்கிருந்து இயக்கத்தினர் தப்பி ஓடி உள்ளனர்.

இந்நிலையில் சர்வ தேச காவல்துறையினர் அந்த தீவிரவாதிகள் அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாக தப்பி ஓடி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.   அவர்கள் தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் தங்கள் தாக்குதல்களை தொடரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த தாக்குதல்கள் இந்தியாவில் கேரளா, தமிழகம், ஆந்திரா மற்றும் காஷ்மீரில் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து கேரளா, தமிழகம், ஆந்திர மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் கூட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  கேரளாவின் கடற்கரை நகரமான கொச்சி மூலம் ஐ எஸ் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் கேரள கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள்து.

கேரளாவில் தற்போது சுமார் 100 பேர் இந்த இயக்கத்தில் இணைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.    அத்துடன் இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவுக்கு தப்பி வந்திருக்கலாம் என கூறப்படுவதால் சாலைகளில் அவர்களை பிடிக்க தேவையான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் செய்யப்பட்டுள்ளன.