கிராமிய வங்கி பணியாளர்கள் தேர்வு மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், வங்கி பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி, எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 4ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பேசும்போது, ”உள்ளூர் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெறுவதை விரிவுபடுத்துகிற வகையில், சம வாய்ப்பினை வழங்குகிற விதத்தில் மாநிலங்களில் உள்ள கிராமிய வங்கிகளில் அதிகாரிகள், அலுவலக உதவியாளர் பணிக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தியுடன் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் சமீபத்திய வங்கி பணியாளர் தேர்வகத்தின் அறிவிப்பில், மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகளான காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில், கடந்த 13ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம், ஆங்கிலம், இந்தி மற்றும் அவரவர் மாநில மொழிகளிலும் தேர்வுகளை எழுத அனுமதி வழங்கப்படுகிறது என்று அறிவித்திருக்கிறது. ஒருபுறம் வங்கி பணியாளர் தேர்வு ஆணையத்தின் அறிவிப்பு இப்படி இருந்தாலும், மற்றொரு புறம் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதாக எதிர்ப்புகள் கிளம்புவதால் குழப்பம் தொடர்ந்து வருகிறது.