நக்கீரன் கோபால் கைது: தமிழகத்தில் நெருக்கடி நிலையா? ஸ்டாலின் டிவிட்

சென்னை:

க்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் ஊடகத்துறையில் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நெருக்கடி நிலையா நிலவுகிறது என்று தமிழக அரசுக்கு   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை தமிழக காவல்துறையின ரால்  கைது செய்யப்பட்டார்.  அவர்மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி குறித்து நக்கீரன் இதழில் தொடர்  கட்டுரை வெளியிட்டது காரணமாக ஆளுநர் தரப்பின் புகார் காரணமாக, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இவரது கைதுக்கு எதிராக தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது டிவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

பேராசிரியை விவகாரத்தில் “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார – பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாசிச பாஜக அரசும் – பொம்மை அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல்

தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பா.ஜ.க அரசும், தமிழக ஆளுநரும் கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அடிமை அரசை பயன்படுத்துவது வெட்கக்கேடானது.

உடனடியாக நக்கீரன் கோபால் அவர்களை விடுதலை செய்க!

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.