காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா ஒரு கூட்டத்தில் பேசுகையில், “காஷ்மீருக்கென்று ஒரு தனித்த அடையாளம் உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, காஷ்மீர் மாநில முதல்வர் ‘பிரதமர்’ என்றே அழைக்கப்பட்டு வந்தார். அந்த நிலை மீண்டும் திரும்ப வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்றார்.

இதுபோதாதா நமது பிரதமருக்கு? உடனே பிடித்துக்கொண்டார். ஐதராபாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், “இந்துஸ்தானத்திற்கு 2 பிரதமர்களா? இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? காங்கிரசும், அவர்களுடைய மகா கூட்டணியிலுள்ள கட்சிகளும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். என்ன காரணத்திற்காக, எந்த தைரியத்தில் ஒமர் அப்துல்லா இதைக் கூறினார்?” என்று பேசத் தொடங்கிவிட்டார்.

ஆனால், வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒன்றும் தவறாகப் பேசிவிடவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய அரசு சட்டம் 1935 -ன் படி, மாகாண கவுன்சில்களுக்கு தேர்தல் நடைபெற வழிவகை செய்யப்பட்டது.

அதன்படி, அன்றைக்கு சென்னை, மும்பை மற்றும் மத்திய மாகாணம் உட்பட பலவற்றுக்கு தேர்தல் நடைபெற்றது. அதிலே வெற்றிபெற்று மாகாண ஆட்சித் தலைவர்களாகப் பதவியேற்றவர்கள், “பிரதமர்கள்” என்றே அழைக்கப்பட்டனர்.

சென்னை மாகாணத்தின் ஆட்சிக்கு ஒரு காலகட்டத்தில் தலைமை வகித்த ராஜகோபால ஆச்சாரியார் கூட, பிரதமர் என்று அழைக்கப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம்.

இந்தியா சுதந்திரமடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகுதான், மாநில அரசிற்கு தலைமை வகித்தவர்கள் முதலமைச்சர் என்று அழைக்கப்பட்டனர். அந்த 1935ம் ஆண்டு சட்டப்படி உருவாக்கப்பட்ட பதவிதான் மாநில ஆளுநர்கள்.

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கூட, மாகாண ஆட்சித் தலைவர்களை “பிரதமர்” என்றே தொடக்க கால சூழல்களில் அழைத்திருக்கிறார். எனவே, ஒமர் அப்துல்லா ஒன்றும் இல்லாததை சொல்லிவிடவில்லை.

– மதுரை மாயாண்டி