திருவள்ளுவரின் பூணூலை மறைத்தாரா கருணாநிதி?: பீட்டர் அல்போன்ஸ் கிளப்பிய சர்ச்சை

திருவள்ளுவர் என்றதும் திருக்குறள் நினைவுக்கு வருவது போலவே கருணாநிதியும் நினைவுக்கு வருவார். குறளோவியம் எழுதியது, பேருந்துகளில் திருக்குறளை எழுத வைத்தது, வள்ளுவர் கோட்டம் அமைத்தது, 133 அடி உயர வள்ளுவர் சிலை எழுப்பியது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அதோடு கே.ஆர். வேணுகோபால் சர்மாவும் மனதுக்குள் நிழலாடுவார். ஆம்.. திருவள்ளுவர் உருவத்தை வரைந்தவர்!

1959ம் ஆண்டு அவர் வரைந்த வள்ளுவர் ஓவியத்தை தமிழ்கூறும் நல்லுலகம் ஏற்றுக்கொண்டது.

வேணுகோபால் வரைந்த திருவள்ளுவர் ஓவியம்

இந்த நிலையில் திருவள்ளுவர் உருவம் குறித்து 22. 08. 2018 தேதியிட்ட துக்ளக் வார இதழில், காங்கிரஸ் கட்சி பிரமுகர் பீட்டர் அல்ஃபோன்ஸ் கூறிய ஒரு கருத்து சர்ச்சையாகியிருக்கிறது.

துக்ளக் இதழில் பீட்டர் அல்போன்ஸ் கருத்து..

 

அதாவது, “சர்மா என்ற ஓவியர் வரைந்த அந்தப் படத்தில் வள்ளுவருக்கு பூணூல் இருந்தது. கருணாநிதி, அந்த ஓவியரிடம் திருவள்ளுவர் மார்பில் குறுக்கே ஒரு துண்டை வரையும்படி கூறினார். இதன் மூலம் திருவள்ளுவர் உருவத்தில் வரையப்பட்டிருந்த பூணூல் மறைக்கப்பட்டது” என்று கருணாநிதியின் சமயோஜித அறிவை பாராட்டும்படியாக கூறியிருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.

பீட்டர் அல்போன்ஸ்

ஆனால், “அந்த ஓவியத்தை வரைந்த சர்மாவே, துண்டை வரைந்தார். அவர் திருவள்ளுவருக்கு பூணூல் வரையவே இல்லை. ஆகவே பீட்டர் அல்போன்ஸ் கூறும் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே கிடையாது” என்கிறார் சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மா. இவர் கவிஞர், நாடக ஆசிரியர், எழுத்தாளர். வீரநங்கை வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தை உருவாக்கியவர்.

ஸ்ரீராம் சர்மா

இவர் நம்மிடம், “ திருவள்ளுவருக்கு ஓர் திருவுருவம் உருவாக்கிட பல்லாண்டுக்காலம் தமிழாய்வும் – ஓவிய ஆய்வும் தன்னலமற்று செய்தார் ஓவியப் பெருந்தகை என்று கொண்டாடப்படும் என் தந்தை வேணுகோபால் சர்மா. இதன் பலனாக திருவள்ளுவருகு ஒரு பொது உருவத்தினைக் கண்டு நிலை நிறுத்தினார்.

1959 ஆம் ஆண்டு திருவள்ளுவ திருவுருவம் கண்டடையப்பட்டு, உலகம் தழுவிய தமிழறிஞர்களால் அது ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு தபால் தலையில் அச்சேறியது. பக்தவத்சலம் தலைமையிலான அன்றைய தமிழக அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்டு,

வேணுகோபால் சர்மா

1964 ல் சட்டசபையில் அன்றைய ஜனாதிபதி ஜாகீர் உசேன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

1967 ல் அண்ணா அவர்களின் ஆட்சியில் அரசாங்க அமைப்புகள் அத்துனையிலும் திருவள்ளுவர் திருவுருவப்படம் நீக்கமற வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ( G.O.M.S. 1193 ) அதன்பின் கருணாநிதி – எம்.ஜி, ஆர் போன்றோரின் ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்தது.

திருவள்ளுவருக்கு திருவுருவம் கொடுத்த வகையில் வேணுகோபால் சர்மா, இழந்த காலமும் – பொருளாதாரமும் மிக அதிகம்.

அவர் ஆச்சாரமான நியோகி ப்ராம்மணக் குடும்பத்தில் தோன்றியவர்தான். ஆனாலும் சாதி, மத பேதங்கள் கடந்து இறுதிவரை எல்லோருக்கும் உரியவராக வாழ்ந்து மறைந்தவர் என்பது அவரை அறிந்தோருக்குத் தெரியும்.

கருணாநிதி

குறிப்பாக அன்றைய முதலமைச்சர்கள் பக்தவத்சலம், அண்ணா, கலைஞர் மற்றும் தமிழ்ச்சான்றோர்கள் பாவேந்தர் பாரதிதாசன், முவ, தமிழ்வாணன், கண்ணதாசன், இன்னும் பல பெரியோர்களுக்கு உறுதியாகவே தெரியும்.

அது குறித்து அவர்களெல்லாம் பேசிய அந்த வரலாற்று ஒலிப்பேழைகள் அனைத்தும் என்னால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் பிராமணக் குலத்தில் வந்த கே.ஆர்.வேணுகோபால் சர்மா தன் போக்கில் திருவள்ளுவருக்குப் பூணூல் இட்டுவிட்டதாகவும், அதனைக் கலைஞர் சொன்ன பிறகு திருத்திக்கொண்டதாகவும் படிப்போர் பொருள் கொள்ளும்படியாகச் தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.

1989 ல் மறைந்த அவர் தன் இறுதி நாள் வரை எந்த அரசாங்கத்திடமிருந்தும் எந்த சலுகையும் பெற்றுக் கொள்ள மறுத்து மறைந்தார். சாதி மத பேதங்கள் கடந்து வாழ்ந்தவர் அவர். அவரை “வள்ளுவருக்கு பூணூல் போட்டார்.. அதை கருணாநிதி மறைத்தார்” என்று நடக்காத சம்பவம் சொல்லி, வேணுகோபால் சர்மாவை சாதி அடையாளத்துக்குள் நுழைக்கலாமா?

வேணுகோபால் சர்மாவிடம் உதவியாளராக இருந்தவர் மாயவரம் பதி. 87 வயது பெரியவர். திருவள்ளுவர் திருவுருவத்துக்கு வேணுகோபால் சர்மா இறுதி வடிவம் கொடுத்து அதனை உலகத்தினர் ஏற்றுக்கொள்ளும் வரை  அவருக்கு  உதவிக்கரமாகத் திகழ்ந்தவர் இவர். அவரும்கூட என்னைத் தொடர்புகொண்டு பீட்டர் அல்போன்சின் கருத்தைப் படித்து வருந்தினார்” என்ற ஸ்ரீராம் சர்மா, “மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போற்றுதலுக்குரியவர். பெரும் சாதனைகள் படைத்தவர். அவரது உண்மையான சாதனைகளைச் சொல்லயே அவரை உயர்த்திட முடியும். இந்த நிலையில் நடக்காத ஒரு சம்பவத்தை வைத்து பேசியிருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.

இது, சாதிமதம் பாராமல் தமிழுக்காக உழைத்த ஓவியர் வேணுகோபால் சர்மாவுக்கு இழுக்கு ஏற்படுமே.

மெத்தப்படித்த, நாகரீமான அரசியல் பிரமுகரான பீட்டர் அல்போன்ஸுக்கு!” என்று சொல்லி முடித்தார் ஸ்ரீராம் சர்மா.

இது குறித்து பீட்டர் அல்போனஸை தொடர்புகொண்டு கேட்டோம். அவர், “குறிப்பிட்ட சம்பவத்தை ஒரு புத்தகத்தில் படித்தேன். அதைத்தான் குறிப்பிட்டேன். ஒருவேளை அந்த சம்பவம், வள்ளுவருக்கு சிலை அமைக்கும்போது நடந்திருக்கலாம். நான் படித்த புத்தகத்தைத் தேடி உறுதி செய்கிறேன்” என்றார்.