சென்னை:

நாளைக்கு நமக்கும் இதுதான் நிலைமையோ? என ஒவ்வொரு மருத்துவர்களும், செவிலியர்களும் நினைத்தால் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பது யார்? பாதுகாப்பது அளிப்பது யார் என்று பிரபல எலும்பியல் நிபுணர் நவீன் சவுத்ரி வேதனை தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

பிரபல நரம்பியல்  நிபுணர் மைக்கேல், கொரோனா நோயால் மரணமடைந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்யவிடாமல் பொதுமக்கள் பலர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் மருத்துவர்களிடையே பெரும் வேதனையையும்,  கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா வைரஸ் பரவாது என பலமுறை அறிவுறுத்தப் பட்டுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரபல எலும்பியல் மருத்துவரான டாக்டர் நவீன் சவுத்ரி, தனது ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.

அதில், நேற்று நடைபெற்ற சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது மட்டுமின்றி வேதனைக்கு உரியது.  கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் அடக்கம் அல்லது தகனம் செய்வது பரவ காரணமில்லை. விழிப்புணர்வு மற்றும் சட்ட அமலாக்கம் தேவை என்று வற்புறுத்தி உள்ளவர், இதுகுறித்து அரசு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இறந்தவர்களின் இறுதி மரியாதைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இந்த சம்பவம் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் சுகாதாரப்பணியாளர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து வரும் மருத்துவர்களோ, செவிலியர்களோ, காவல்துறையினரோ, ஒருவேளை தாங்களும் மரணமடைந்தால், இறுதியில், இதுபோன்ற நிலைதான் ஏற்படுமோ, தங்களது குடும்பத்தினரும் தாக்கப்படுவோர்களோ என நினைத்தால்… பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது யார், சிகிச்சை அளிப்பது யார்? 

பொதுமக்கள் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். இதுபோன்று அடாவடி செய்பவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து அடக்கப்படவேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 15ந்தேதி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படிதான் கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இறந்தவர்களின் உடலில் இருந்து ஒருபோதும் கொரோனா வைரஸ் பரவாது. நேற்று நடைபெற்றுள்ள   சம்பவம் பிற மருத்துவர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் தமிழகஅரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மக்களின் உயிரை காப்பாற்றும் உண்ணதமான சேவை புரியும் மருத்துவர்களின் உடலை அடக்கம் கூட செய்ய விடாமல் அவமரியாதை செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

இனிமேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாதவாறு தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் கொடுக்கும் பரிசு இதுதானா? கண்ணீருடன் கேள்வி விடுக்கும் மருத்துவர்… வீடியோ