காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஸ்ரீதர் தனபால். கொலை, கொள்ளை உட்பட பல்வேறு குற்றவழக்குகள் இவர் மீது உண்டு.  நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்தியாவை விட்டு தப்பியோடிய ஸ்ரீதர், துபாயில் வசித்துவந்தார். பிறகு கம்போடியா நாட்டிற்குச் சென்றார். அங்கு அவர், தற்கொலை செய்துகொண்டதாக தமிழக காவல்துறை நேற்று அறிவித்துள்ளது.

“தமிழக தாவுத் இப்ராஹிம்” என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு உலகம் முழுதும் அண்டர் வேர்ல்ட் லிங்க் வைத்திருந்தவர் ஸ்ரீதர். வெளிநாட்டில் இருந்தபடியே தமிழகத்தில் பல குற்றச் செயல்களை நடத்தி வந்தவர்.

இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது ஆச்சரியதை ஏற்படுத்தி இருக்கிறது.

இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

அதாவது, “நான் சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் செய்யவில்லை. சட்டத்தின் ஓட்டைகளில் நெளிவு சுழிவுகளோடு சில செயல்களைச் செய்கிறேன்” என்று தனது கூட்டாளிகளிடம் அடிக்கடி சொல்வாராம் ஸ்ரீதர்.

மேலும், “என் மீது சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் கிடையாது. அப்படி யாரேனும் ஆதாரம் இருப்பதாக நிரூபித்தால் அப்போதே சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொள்வேன்” என்பாராம்.

இவர் துபாயில் இருந்தபோது, அங்குள்ள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதிலும் இதே கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் சமீபத்தில் இவரது கூட்டாளி சுரேஷ்  குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பல நாட்களுக்கு முன்பே சுரேஷை தனது கஸ்டடியில் வைத்து விசாரித்து வந்ததாம் காவல்துறை.

இதில் ஸ்ரீதர் பற்றிய பல்வேறு ஆதாரங்கள் கிடைத்ததாம். இந்தத் தகவல் அறிந்ததுதான் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டார் என்கிறார்கள்.